பலதும் பத்தும்

விமான விபத்து நடந்த இடத்தில் கறுப்பு பெட்டி மீட்பு; தீப்பற்றி எரிய காரணம் என்ன?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்ட நிலையில் விபத்து குறித்த காரணம் விரைவில் தெரியவரும்.

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.

இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர்.

இது குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் தரப்பில், “ஏர் இந்தியா விமானமானது ஓடு பாதையில் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பறக்க தொடங்கியதும் மேலே எழும்பாமல் 2 நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியது.

லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமான சக்கரம் ஏதாவது கட்டிடம் மீது மோதியிருக்கலாம் அல்லது பறவை மீது மோதியிருக்கலாம். தற்போது, விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து விசாரணை நடத்தினால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரியவரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு செயல்படுகிறது?
விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கறுப்பு பெட்டியில் விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் பதிவாகும். மேலும், விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை ஆகிய தகவல்களும் பதிவாகும்.

தீ விபத்து ஏற்பட்டாலோ, கடலில் மூழ்கினாலோ கறுப்பு பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாது. இந்நிலையில் தான் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பதிவான தகவல்களை பெற 15 நாட்கள் வரை ஆகும். அதன் பின்னரே விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button