வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெறுவது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றி

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலுள்ள காணிகளை அரச காணிகளாக அபகரிக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம்-28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இன்று (நேற்று செவ்வாய் ) அரசாங்கத்தால் மீளவும் வாபஸ் பெறப்படுவது செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காணி அலுவலகமும் இந்தச் செய்தியை உறுதி செய்துள்ளது. வடமாகாண மக்களுக்கு ஒரு மிக மோசமான பின்னடைவு வரக் கூடிய ஆபத்து இதன்மூலம் தடுக்கப்பட்டுள்ளது. வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருப்பது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றி எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் பாராளுமன்றத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்று அதன்மூலம் பாரியதொரு அழுத்தத்தை ஏற்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். பாராளுமன்றத்தில் இதுதொடர்பான ஒரு ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்த போது அதனை வழிமொழிந்து ஆதரித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரனுக்கு நான் நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். அத்துடன் வைத்தியர் அர்ச்சுனாவும் இந்த ஒத்திவைப்புப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு எங்கள் கருத்துக்களை முழுமையாக ஆதரித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர்களுக்கும் எமது நன்றிகள்.
வடக்கு மாகாணக் காணி அபகரிப்புத் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றே ஆக வேண்டுமென வலியுறுத்திக் கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தமிழ்த்தேசியப் பேரவை தொடர் சந்திப்புக்களில் ஈடுபட்டு வந்தது. இந்தப் பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதாக குறித்த வெளிநாட்டுத் தூதரகங்களைச் சார்ந்தோர் எங்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார்கள். அவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எங்களின் பெருநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த விவகாரம் சம்பந்தமாக அவர்களின் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாவிட்டால் அரசாங்கம் குறித்த வர்த்தமானியை வாபஸ் பெற்றிருக்காது என்பது நிதர்சனம்.
பாராளுமன்றத்தில் நாங்கள் இதுதொடர்பான பிரச்சினையை அரசியல்ரீதியாக கிளப்பிக் கணிசமான அழுத்தங்களை வழங்கிய போது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து எடுத்த முயற்சிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைந்திருந்தன. ஒத்திவைப்புப் பிரேரணையில் கூட பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கள் எங்களை நிராகரிக்கும் வகையில் தான் அமைந்திருந்தது. அதுமாத்திரமன்றித் தேசியமக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூடப் பேசும் போது குறித்த வர்த்தமானியை முற்றுமுழுதாக நியாயப்படுத்தி, தேவையில்லாமல் நாங்கள் தான் குழப்புகின்றோம் என்ற அடிப்படையில் உரையாற்றியிருந்தார். இவை எல்லாம் வெற்றிபெறாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பருடைய பேச்சும், ஒத்துழைப்பும் தான் முக்கிய காரணி. அவர் இந்த ஒத்திவைப்புப் பிரேரணையை முழுமையாக ஆதரித்து உரையாற்றியிருந்தார். அவருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் எங்கள் நன்றிகள்.
இதன்பின்னர் அழுத்தம் காரணமாகத் தவிர்க்க முடியாமல் பிரதமர் ஹரிணி அமரசூரிய அனைத்து வடக்கு- கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து இந்த விவகாரம் ஆராய்ந்த போதும் கூட பாராளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் எனக்கு அருகிலிருந்து ஆதரவு வழங்கிப் பேசியிருந்தார். அதேபோன்று ரவூப் ஹக்கீமும் குறித்த வர்த்தமானி தொடர்பான தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தெலிவுபடுத்தியிருந்தார். இந்தக் கூட்டு முயற்சியே எங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
![]()
இனி தமிழ்அரசியல்வாதிகள் சும்மா இருக்க மாட்டார்கள்.வெற்றி முழக்கம் இடத் தொடங்கிவிடுவார்கள்.தமிழரசியல்வாதிகள் அறிவஜிகளோ புத்திசாலிகளோ என்றால் அது கொஞ்சமுமே இல்லை.சாதுரியமாக நடக்குவம் மாட்டார்கள்.
நாங்கள் தமிழன்டா அழக்கடலெங்கும் கொடிகட்டிப் பறந்தவராடா என்று வீராப்பு பேசுவதை விட்டிட்;டு எமது வேண்டுகோளை ஏற்று வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றமைக்கு ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றிகள் என்று சொன்னாலே இந்த நன்றி அவர்களைச் சிந்திக்க வைக்கும்.