இலங்கை

யாழில் பௌத்தத்தை அச்சுறுத்தும் செயல்கள்; விமல் கொதிக்கிறார்

அரசாங்கம் முறையான நடவடிக்கைகள் எடுக்காமையினால் யாழ்ப்பாணத்தில் பௌத்தத்திற்கு எதிரான அடிப்படைவாதிகளுக்கு உயிர் வந்துவிட்டது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில்  நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் வந்த நாள் முதல் பௌத்த சாசனத்தின் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதலின் உச்ச நிலைமையாக வெசாக் தினத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் மத அடிப்படை வாத குழுவொன்று அந்த விகாரைக்கு வழிப்பாட்டுக்காக வந்தவர்களுக்கு இடமளிக்காது, அவர்கள் பயணித்த பஸ்களை இடை மறித்து, பொலிஸாரின் உத்தரவுகளையும் மதிக்காது எந்தளவுக்கு ஆட்டத்தை ஆடினர் என்பதனை அனைவரும் பார்த்தனர். அடிப்படைவாதிகளுக்கு உயிர் வந்துள்ளது.

இந்த அரசாங்கம் எதுவும் செய்யாது என்ற நம்பிக்கையுடன் அடிப்படைவாதிகள் பொலிஸாரிடம் சண்டித்தனம் காட்டுகின்றனர். நீதிமன்ற உத்தரவையும் சதத்திற்கேனும் கணக்கில் எடுக்காது செயற்படுகின்றனர். ஆயுதம், பெட்டன் தடிகள் இன்றியே பொலிஸார் நடமாட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபரிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதால் அவர்கள் அவ்வாறு நடந்துகொள்கின்றனர். எந்தவொரு மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன. அதற்கு எவரும் இடையூறு செய்யக்கூடாது. ஆனால் யாழ்ப்பாணத்தில் அதற்கு இடம் கிடைப்பதில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *