உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க 25 லட்சம் ரூபா வரை பேரம் பேசுகிறது அரசு!

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளுக்கமைய ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை ஆசனங்கள் இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளுக்கும் மாறாக முறையற்ற வழிமுறைகளை தேசிய மக்கள் சக்தி பின்பற்றுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டுகிறது.
உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி சபைகளில் வெற்றிபெற்ற போதும், அவற்றில் 164 சபைகளில் மாத்திரமே அந்தக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதனால் வென்றுள்ள சபைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சபைகள் ஆட்சி யாருக்கென்ற தொங்கு நிலையில் உள்ளன.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கிடையே ஆட்சியமைப்பது தொடர்பில் கடும் போட்டி நிலவுவதுடன், இரு கட்சிகளும் ஏனைய கட்சிகளுடனும் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
இதன்படி கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தலைவர் அல்லது மேயர் பெரும்பான்மை வாக்குகளுடன் நியமிக்கப்பட்டு ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டிய நிலைமையில் தேசிய மக்கள் சக்தி அவ்வாறான இடங்களில் சுயேச்சைக் குழுக்களின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளது. அத்துடன் அரசாங்கத்துடன் இணங்கக் கூடிய பிரதான எதிர்க்கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகளை இணைத்துக்கொள்ளவும் அந்தக் கட்சி எதிர்பார்க்கின்றது. இதற்காக குறிப்பிட்ட சுயேச்சைக் குழுக்கள் மற்றும் கட்சிகளின் உறுப்பினர்களைள அணுகும் நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.
இதன்போது அரசாங்கம் முறையற்ற முறைமைகளில் அவர்களை அணுகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அரசாங்கம் சலுகைகளையும், பணத்தையும் வழங்கி உறுப்பினர்களை தம்வசம் இழுக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, அப்புஹாமி, தயாசிறி ஜயசேகர ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறாக 2.5 மில்லியன் ரூபா வரையிலான தொகைக்கு உறுப்பினர்கள் பேரம் பேசப்படுவதாக தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். இது அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணான செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தமது கட்சி மோசடியான அரசியலில் ஈடுபடாது என்றும், அவ்வாறான கலாசாரத்தை கட்சி ஆதரிக்காது என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கத்துடன் பயணிக்கக்கூடிய முற்போக்கான சிந்தனையுடைவர்களின் ஆதரவை பெற்று குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
![]()