வடக்கில் 6000 ஏக்கர் காணி ஆக்கிரமிப்பு சிறிதாக விடுவிப்பு பெரிதாக ஆக்கிரமிப்பு

வடமராட்சிப் பிரதேசத்தில் மருதங்கேணியிலிருந்து வன்னியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வரை 6000 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு அடையாளம் கண்டு இதுதொடர்பான வர்த்தமானியையும் தற்போதைய அரசாங்கத்தினர் வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட சிறியளவிலான காணிகளை மாத்திரம் விடுவித்துக் கொண்டு பெரியளவிலான காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கிறது. இதுதான் தற்போதைய நிலைமை எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரவையின் மேதின எழுச்சிக் கூட்டம் யாழ்.வடமராட்சி நெல்லியடி மாலுசந்தியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம்பெற்ற போது க உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்பேசுகையில்,
கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப் போவதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கப் போவதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடான சட்டம் எதுவுமே தேவையில்லை எனவும், இராணுவத்திற்கும், தனியார் காணிகளுக்கும் தொடர்பில்லை என்பதால் அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அநுரகுமார குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து மாதங்களான நிலையில் அரசியல் கைதிகளென்று யாருமே இல்லையாம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவோம், ஆனால், நாங்கள் புதுச் சட்டமொன்றைக் கொண்டு வரவுள்ளதாக அரசாங்கத் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தையிட்டி உட்படப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் எங்கள் மீது தற்போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாய்ந்து கொண்டிருக்கின்றது.. எங்களுக்கே இப்படியென்றால் பொதுமக்களின் நிலை என்ன?
நாங்கள் தேசிய மக்கள் சக்தியை நிராகரிக்க வேண்டுமென்று கூறுவது பெரும்பான்மையாக சிங்களமக்களைக் கொண்ட ஒரு கட்சி என்பதற்காக அல்ல. அவர்களின் கொள்கைகளே காரணம். தேசியமக்கள் சக்தியின் தலைவர்கள் வடக்கு, கிழக்குக்கு வருகின்ற போது இதற்கு முன்னர் 76 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் சிங்கள இனவாதிகள். அவர்களுடைய மோசமான நிலைப்பாடுகளால் தான் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் நிலவியிருக்கின்றன. ஆனால், தாங்கள் இனவாதிகள் அல்ல. எங்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. இனவாத காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்பது தான் அவர்களின் பிரசாரம்.
அவ்வாறெனில், தேசியமக்கள் சக்தி கூறுகின்ற இனவாத கட்சிகள் கடைப்பிடித்த நிலைப்பாட்டை விடவும் முற்றிலும் வித்தியாசமான நிலைப்பாட்டைத் தான் தேசியமக்கள் சக்தி தமிழ்மக்கள் தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இனப்படுகொலைக்கு பொறுப்புக் கூறல் ஊடாகத் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தர தேசியமக்கள் சக்தி அரசாங்கம் தயாரில்லை. 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைத் தான் தாங்கள் அரசியல் தீர்வாக கொண்டு வந்து நிறைவேற்றப் போவதாக தற்போதைய ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த அரசியலமைப்பு யோசனைகள் தற்போது நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமையை விடவும் மிகவும் இறுக்கமான அரசியலமைப்பு யோசனைகளாக உள்ளது .
வடமராட்சிப் பிரதேசத்தில் மருதங்கேணியிலிருந்து வன்னியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வரை 6000 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு அடையாளம் கண்டு இதுதொடர்பான வர்த்தமானியையும் தற்போதைய அரசாங்கத்தினர் வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட சிறியளவிலான காணிகளை மாத்திரம் விடுவித்துக் கொண்டு பெரியளவிலான காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கிறது. இதுதான் தற்போதைய நிலைமை .இதுதான் இந்த அரசின் இரட்டைவேடம் என்றார்.
![]()