இலங்கை

பாதாள உலகக் குழுக்களை எதிரிகளை ஒழிக்க அரசு பயன்படுத்துகின்றதா?

அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளை இல்லாமல் செய்வதற்காக ஜே.வி.பியினால் பாதாள குழுக்கள் பயன்படுத்துகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட டேன் பிரியசாத் என்பவர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர் என்றும், இதனால் இவரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்போத அவர் மேலும் கூறுகையில்,

டேன் பிரியசாத் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி வேட்பாளராக இருந்தார். அதேபோன்று இவர் ஊழல் மோசடிகளுக்கு எதிரான சமூக செயற்பாட்டாளராக பிரபலமாக இருந்த நபராகும். இவரின் கொலை சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது. இந்த சந்தேகத்திற்கு சில காரணங்கள் உள்ளன. இவர் இறப்பதற்கு முன்னரே உயிரிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவரின் மரணத்தை எதிர்பார்த்திருந்ததை போன்றே இருந்துள்ளது. அதேபோன்று முன் ஏற்பாடுகளுடன் இருந்ததை போன்று சமூக வலைத்தளங்களில் அவரின் மரணம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று உள்ளூராட்சித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் எதிர்தரப்பு வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் அரசாங்கம் ஒரு வசனமேனும் கூறாமல் இருக்கின்றது. இந்த விடயங்களை பார்க்கும் போது அவரின் மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கின்றது.

டேன் பிரியசாத், இலங்கை வரலாற்றில் மிகவும் பெரிய மோசடியான ஜே.வி.வியின் கொள்கலன் திருட்டு தொடர்பில் முறைப்பாடு செய்தவர்களில் ஒருவராவார். வெளிப்படையாக அச்சமின்றி கதைத்தவராவார். இதனால் இவரின் கொலைக்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்ற சந்தேகங்கள் மக்களுக்கும் எமக்கும் உள்ளது.

திடீரென பாதாள குழுவின் தலைவர் ஒருவருடையது என்று கூறப்படும் குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது. இது உண்மையானதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் செய்திகளில் இந்த குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்ட பாதாள குழுத் தலைவர் கூற முயற்சிப்பதானது ஜே.வி.பிக்கு எதிராக செயற்படுவது தவறானது என்பது போன்றே உள்ளது. இதனால் பாதாளக் குழுக்கள் ஜே.வி.பிக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இது ஆபத்தானது. நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. சாதாரண பிரஜைகளின் உயிரை பாதுகாக்கும் உரிமையை இல்லாமல் செய்யும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. எவ்வித அச்சமுமின்றி தொடர்மாடி வீட்டுத் தொகுதிக்குள் சென்று வீட்டுக்குள் புகுந்தே துப்பாக்கிச் சூட்டை நடத்தும் அளவுக்கு நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தில் இருக்கின்றது. இது நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு முதலீடுகளைக்கூட இல்லாமல் செய்யும் அளவுக்கு நிலைமை உள்ளது.

எவ்வாறாயினும் கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இவ்வாறாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடக்கவில்லை. இப்போது தினசரி நடக்கின்றது.

சிகாகோ இருந்ததை போன்ற நிலைக்கு இலங்கை தள்ளப்படுகின்றது. பாதாள குழுக்களின் உள்ளக மோதல்களே நடக்கின்றன. இதனால் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இது ஜே.வி.பி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும், அவர்களின் ஊழல்களை சுட்டிக்காட்டும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் நடக்கின்றது என்றால், சாதாரண மக்களின் வீடுகளுக்கு சென்று துப்பாக்கி சூடுகளை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றது என்றால் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டில் வர்த்தகர் ஒருவருக்கும் வர்த்தகம் செய்யவோ, அவர்களின் பிள்ளைகளை பாடாசலைகளுக்கு அனுப்பவோ முடியாமல் போகலாம். இவ்வாறான நிலைக்கு இந்த நாடு கொண்டு செல்லப்படுகின்றது. நடக்கும் சம்பவங்களின் மூலம் மீண்டும் 1988/89 போன்று ஜே.வி.பி ஒடுக்குமுறைகளுக்குள் செல்கின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *