மன்னாரிலிருந்து சொப்பிங் பையுடன் வந்து கோடீஸ்வரர்களானவர்களையும் விட மாட்டோம்; வடக்கின் பெரிய தமிழ்கட்சி நாங்களே

மன்னாரில் இருந்து புத்தளத்திற்கு சொப்பிங் பையுடன் வந்தவர்கள் இன்று பத்து கப்பல்களை வாங்கும் நிலையை அடைந்துள்ளனர். நாங்கள் யாரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். என்று சிவில் விமானபோக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இன்று மிகப்பெரிய இலஞ்ச ஊழலில் ஈடுபட்ட முதலைகளை பிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வேலை நடக்கிறது. முன்னொரு காலத்தில் அமைச்சர்களை கண்டு பொலிஸார் ஓடி ஒளிந்தார்கள். இன்று பொலிஸாருக்கு பயந்து அமைச்சர்கள் ஓடி ஒளியும் நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
ராஜபக்சவே பெரிய முதலை
கிளிநொச்சியில் ஒருவர் வடமாகாணத்தில் இருக்கின்ற கள்வர்களை நீங்கள் பிடிக்கமாட்டீர்களா என்று கேட்டார். இங்கே இருக்கின்ற கள்வர்களையும் நாங்கள் பிடிப்போம்.இங்கும் மன்னாரில் இருந்து புத்தளத்திற்கு சொப்பிங் பையுடன் வந்தவர்கள் இருக்கின்றனர். இப்போது அவர்களது சொத்துக்கள் மூலம் பத்து கப்பல்களை வாங்க முடியும். டக்ளஸ் எல்லா அரசிலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் யாரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
பெரிய முதலைகள் கொழும்பிலே தான் இருக்கிறார்கள். ராஜபக்ச மிகப்பெரிய முதலை. நாமல், யோசித்த ஆகியோருக்கு பொதுமக்களின் பணத்தை சூறையாடியதற்காக வழக்குகள் பதிவுசெய்துள்ளோம்.
பெண்கள் பொட்டுவைத்தாலும் சோதனை
முன்பு சோதனை சாவடிகளில் பெண்கள் பொட்டு வைத்துச்சென்றால் இருமுறை சோதனை செய்வார்கள். பொட்டு இல்லாவிடில் ஒருதரம் செய்வார்கள், முஸ்லிம் மக்கள் என்றால் மூன்றுதரம் செய்வார்கள், அதை மாற்றும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்துள்ளோம்.
இனி கனடா வேண்டாம்
காணாமல் ஆக்கப்பட்ட ஒருமகன் மீண்டும் கிடைத்தது போல வடமாகாணம் எமக்கு கிடைத்துள்ளது. அதனை நாங்கள் அன்போடு பாதுகாப்போம். வடக்கை வளப்படுத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். பலாலி விமானநிலையத்தை விருத்தி செய்வோம். அங்கு கொழும்பில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குவோம். அதன் பிறகு உங்களது உறவுகளுக்கு கனடா சென்று பனியிலே கஷ்டப்படும் நிலை மாறும் என்றுசொல்லுங்கள்
100 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு
இந்த பிரதேசத்தில் இருக்கும் காணியை யுத்த தேவைகளுக்காகவும் அதற்கு பிறகும் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்களின் காணிகளை அவர்களுக்கே வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 25 பகுதிகளில் 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அடையாளம் கண்டுள்ளோம். தாங்கள் பிடித்த நிலங்களை அப்படியே வைத்திருக்கவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.ஏனெனில் மீண்டும் ஒரு யுத்தம்வரலாம் வந்தால் தங்களுக்கு சுலபம் என நினைக்கிறார்கள். இனிமேல் யுத்தம் வராது. நாங்கள் தேசிய சமாதானத்தை நிலை நிறுத்தும் ஒரு தேசத்தை கட்டி எழுப்புவோம்.
வடக்கில் ராஜபக்சக்கள்
நிலங்களை விடுவிக்கும் போது தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு கஷ்டமாக இருக்கும். அதேபோல வடக்கிலும் இனவாதிகள் உள்ளனர். 4 மாதத்தில் ஒரு அப்பக்கடையை போடுவதே கடினம். நாங்கள் ஆனையிறவு உப்பு உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம்.
அதனை தொடங்கிய பின்னர் சுமந்திரனுக்கு அது பிரச்சினையாக உள்ளது. உப்பு பக்கற்றில் பெயர் பிழையாம். உப்பிலே நீங்கள் பாப்பது பெயரையா ருசியையா?.இவ்வாறான சின்ன விடயங்களுக்காக இனவாதத்தை தூண்டும் ராஜ்பக்ச போன்ற சகோதரர்கள் வடக்கிலும் உள்ளனர்.
வடக்கின் பெரிய தமிழ்கட்சி நாங்களே
தமிழ்கட்சிக்கு வாக்களிக்குமாறு இன்று சொல்கிறார்கள். இலங்கையில் உள்ள மிகப்பெரிய தமிழ் கட்சி தேசிய மக்கள் சக்தியே. வன்னி யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தமிழ்கட்சி தேசிய மக்கள் சக்தியே. சுமந்திரனுக்கான வாக்குகள் யாழில் இம்முறை கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் தமிரசுக்கட்சியில் ஒருவர்கூட பாராளுமன்றில் இல்லை. சிறிதரன் கிளிநொச்சி வாக்குகளாலே வந்தார்.
கம்மன்பில ராஜபக்சவின் கையாள்
தெற்கின் கம்மன்பில போன்றோர் வடக்கிலும் உள்ளனர். அவர்கள் இனவாதத்தை விதைக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில்தான் பிள்ளையானை கைதுசெய்திருக்கிறோம். அவரை கைதுசெய்தவுடன் அவருக்கு தொலைபேசி அழைப்பில் கதைக்கவேண்டும் என முதலாவதாக முற்பட்டவர் யார் என்று தெரியுமா பிள்ளையானின் மனைவி அல்ல. ரணில் விக்கிரமசிங்க. இருவரும் நண்பர்களா?. இல்லை. கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக ஏன் மாறுகிறார்?. அவர் ராஜபக்சவின் கையாள் . உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய விசாரணை நடத்தப்படும் போது ராஜபக்ச, ரணில், சஜித் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஒற்றுமையை ஏற்படுத்தும் போது இனவாதிகள் குழப்பம் அடைந்துள்ளனர். யாழில் சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் எமது வேட்பாளர்கள் தொடர்பாக தேவையில்லாத விடயங்களை சொல்லிவருகின்றனர். இப்படியான பொய்களை மக்கள் நம்பவேண்டாம். சுமந்திரனை விட நான் அதிகமாக யாழ்பாணம் போயிருப்பேன் .கிராமத்திலும் தேசியமக்கள் சக்தி ஆட்சியை அமைப்போம். எனவே மக்கள் அர்ப்பணிப்புள்ள வேட்பாளர்களை தெரிவுசெய்யவேண்டும் என்றார்.
![]()