உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போலி சூத்திரதாரியின் பெயர் அறிவிப்பை முறியடித்துள்ளேன்

பிள்ளையான் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறி அரசாங்கத்தின் மனதில் உள்ளவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக அறிவிக்க எடுத்த முயற்சியை தான் முறியடித்துள்ளேன் என்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை அறிவிக்காவிட்டால் வீதிக்கு இறங்குவோம் என்று பேராயர் கூறியிருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அந்தத் தகவலை வெளியிடுவோம் என்று கடந்த மார்ச் 30 ஆம் திகதி ஜனாதிபதி கூறியிருந்தார். இவ்வாறான நிலைமையிலேயே பிள்ளையானை தடுத்து வைத்து விசாரணை நடத்தியதில் பிள்ளையான் வாக்குமூலம் வழங்கியதாக கூறி அரசாங்கத்தின் மனதில் உள்ளவரை பிரதான சூத்திரதாரியாக அறிவிக்க திட்டமிடப்பட்டது. இதனாலேயே பிள்ளையானை எவரும் சந்திக்க முடியாதவாறு தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவர் பேராசிரியர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினாலும் பொலிஸ் அமைச்சர் அவர் பல்வேறு தகவல்கள் வெளியிட்டு வருகின்றார் என்று கூறியிருந்தார். இவ்வாறான நிலைமையில் பிள்ளையான் கூறியுள்ளதாக ஒவ்வொரு கதைகளை சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியிட்டனர். இவ்வாறான நிலைமையில் அவர்களின் முயற்சிகளை தோற்கடித்து சட்டத்தரணியாக நான் பிள்ளையானை சந்தித்தேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், அவ்வாறு கேட்டாலும் எதுவும் எனக்கு தெரியாது என்றும் அவர் கூறியிருந்தார். அரசாங்கம் பொய்களை கூற முயன்ற போதும் நான் அதனை முறியடித்துள்ளேன்.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் உலகில் உள்ள விசேட விசாரணை நிறுவனமான எப்பிஐ நிறுவனம் அதனை கூறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பலரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதால் குறித்த நிறுவனம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் தமது அனுபவத்தை கொண்டும் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தௌஹீத் ஜமாத்தை சேர்ந்த சஹரான் என்றும், நௌபர் மௌலவி இரண்டாவது நபர் என்றும், ஐஎஸ் அமைப்பின் உத்தரவுக்கமைய இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எப்பிஐ நிறுவனம் கூறியுள்ளது.
இதேவேளை சிங்கபூர் பல்கலைக்கழகத்தின் பயங்கரவாதம் தொடர்பான விசேட ஆய்வு பேராசிரியரான ரொஹான் குணரட்னவும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியும், அது தொடர்பான தகவல்களை ஆராய்ந்தும் ஐஎஸ் அமைப்பின் உத்தரவுக்கமைய சஹரான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளார்.
ஆனால் எப்பிஐ நிறுவனத்தை விடவும் மற்றும் ரொஹான் குணரட்னவை விடவும் திறமையான விசாரணையாளர்கள் இந்த சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அவர்கள் பார்வையாளர்களை அதிகரித்துக்கொள்வதற்காக ஒவ்வொன்றை கூறுகின்றனர் என்றார்.
![]()