இலங்கை

பிள்ளையானுக்கு உதவ ரணில் தயார்

தனது அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றியவர் என்ற அடிப்படையிலேயே பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தனை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் தற்போது அந்த அழைப்பையே இந்த அரசாங்கம் பிடித்துக் கொண்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், பிள்ளையான் ரணில் விக்ரமசிங்கவிற்கு உதவிய ஒருவர் என்றும், அவரது அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர் என்றும் தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் திடீரெனக் காவலில் எடுக்கப்பட்டாரா என்பதை விசாரிப்பது தனது பொறுப்பு என்றும் ரணில் விக்ரமசிங்க இந்தப் பொறுப்பை மட்டுமே நிறைவேற்றினார் என்றும் குறிப்பிட்டார்.

இதற்குப் பின்னால் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதியை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வரவழைத்து, தொலைபேசி மூலம் பிள்ளையானைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததற்கான காரணத்தைக் கேள்வி கேட்க முடிந்தால் அதை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இங்கு மறைப்பதற்கு எதுவுமில்லையெனவும் முன்னர் பட்டலந்த பற்றி பேசியவர்கள் தற்போது இந்த அழைப்பை பிடித்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இப்போது அவர்கள் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பான அவரது கருத்துக்கள் குறித்தும் ஒரு வாக்குமூலம் பதிவு செய்ய விரும்புகிறார்கள். இவற்றை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, காவலில் உள்ள ஒரு சந்தேக நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வது சட்டவிரோதமானது என தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக ஏப்ரல் 9 ஆம் திகதி மட்டக்களப்பில் சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *