ராமர் பாலம் அருகே உள்ள மண் திட்டுகளில் சுற்றுலா சேவை; இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் அச்சுறுத்தல்!

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
ராமர் பாலம் அருகே உள்ள மண் திட்டுகளில் சுற்றுலா சேவையை தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளமை இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே அமைந்திருக்கும் இராமர் பாலம் எனக் கருதப்படும் பகுதியில் சுற்றுலா படகு சேவை தொடங்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இருநாடுகளுக்குமிடையே கடலின் நடுவே பல மண் திட்டுகள் உள்ளன.அவற்றில் அதிக மண் திட்டுகள் இலங்கையின் வசமே உள்ளன. இலங்கை வசமுள்ள 10 க்கும் மேற்பட்ட மண் திட்டுகளில் சில பகுதிகளை தனியார் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் இத்திட்டம் செயற்பாட்டுக்கு வரும் வேளையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
இராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே அமைந்திருக்கும் இராமர் பாலம் என கருதப்படும் பகுதியில் சுற்றுலா படகு சேவை தொடங்கவுள்ளதான இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பானது
இந்தியாவை பொறுத்தவரை பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலுக்குரிய விடயமாகும். இந்தியாவின் எல்லைக்கு மிக மிக அருகில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த சுற்றுலா திட்டத்தின் பகுதிகளுக்கு இலங்கையை சார்ந்தவர்களோ அல்லது வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களோ வந்து செல்வார்கள். அதாவது தமிழ்நாட்டின் மிக மிக அருகாமைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.இவ்வாறு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதை எவ்வாறு இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியும்?
ஏற்கனவே சில தீவுகள் (மணல் திட்டுகள்) தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் சில தீவுகள் வழங்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் இத்திட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் அதேவேளை, தமிழக மீனவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக வரக்கூடும் என ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
![]()