வேறு கட்சிகள் வென்றால் நிதி ஒதுக்கப்படாதா?; அநுரவின் மிரட்டலுக்கு எவரும் அஞ்சக் கூடாது!

உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே அந்த மன்றங்களுக்கு நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதி அவ்வாறு யாரையும் பாரபட்சமாக நடத்த முடியாது.அவரது இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன் , ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.
பொத்துவில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியமிக்கப்படுகின்றார். அவ்வாறு இல்லாது ஜே.வி.பி.க்கு மாத்திரம் சேவையாற்றுவதற்காக நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதியானவர் கட்சி, சாதி, இனம், மதம் பாராமல் அனைவருக்கும் சமமான சேவையை வழங்க வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் அச்சுறுத்தல்களை கண்டு சளைக்க வேண்டாம்.
ஜே.வி.பி அரசாங்கத்திற்கு பொய் சொல்லவும் ஏமாற்றவும் மட்டுமே தெரியும். அன்று தேர்தல் மேடையில் சொன்னதை இன்று செய்ய முடியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இன்று மக்களுக்கு வறுமையும், அசௌகரியமும் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். இதற்கான வலுவான முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் முன்னெடுக்க வேண்டும்.
அதை விடுத்து உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே அந்த மன்றங்களுக்கு நிதி வழங்குவோம் என ஜனாதிபதி கூறுவதை ஒருபோதுமே ஏற்க முடியாது என்றார்.
இதேவேளை சமீபத்தில், நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பலஸ்தீன மக்கள் குறித்து அவர் கருதிய கருத்தை ஸ்டிக்கர் ஒட்டி வெளிப்படுத்தியிருந்தார். அவ்விளைஞர் பலஸ்தீன மக்கள் சார்பாக தனது கருத்துக்களை முன்வைத்த போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தினை பிரயோகித்து கைது செய்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முன்நின்றார். ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்தார். பலஸ்தீன மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம் முன்னெடுக்கப்பட்ட சமயங்களில், பாரிய படுகொலைகள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், அப்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர குமார திஸாநாயக்க குரல் எழுப்பினார். இன்று பலஸ்தீன மக்கள் சார்பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் குரல் எழுப்பிய சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அவருக்கு எதிரான தடுப்புக் காவலில் வைக்கும் பத்திரத்தில் கையொப்பமிடும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துள்ளார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
![]()