இலங்கை

ட்ரம்பின் 44 வீத வரி அமுலானால் வருடாந்தம் 500 கோடி ரூபாவை வடக்கு மீனவர்கள் இழக்கும் நிலை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் இலங்கைக்கு விதித்த 44 வீத வரியினால் வடபகுதி சிறு கடற்றொழிலாளர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படப்போவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் கடலுணவுகள் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட நண்டு சதையானது பொருளாதார சமூக காரணிகளிற்காக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இலங்கையில் பதப்படுத்தப்பட்டு தகரத்தில் அடைக்கப்பட்ட நண்டு சதையானது முற்றுமுழுதாக அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்பதுடன் அதற்க்கு வேறு பிரத்தியேக மாற்று சந்தைகள் இல்லை என்பதும் குறிப்பிடதக்கது.

இலங்கையின் வட மாகாணத்தில் நீலக்கால் நண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களிற்க்கு பதப்படுத்தப்பட்ட நண்டு சதை உற்பத்தி தொழில்துறையேநிலையான சந்தை வாய்ப்பை வழங்குவதாக காணப்படுவதுடன், யுத்தம் நிறைவடைந்த பின்பு வட மாகாணத்தில் முதலாவது முறைப்படுத்தப்பட்ட தொழில்துறையும் இதுவேயாகும்.

நிறுவப்பட்ட பதப்படுத்தப்பட்ட நண்டு சதை தொழில்துறையானது முதலாவது ஆயிரக்கணக்கான மீனவர்களிற்கு நிலையான சந்தை வாய்ப்பையும் வட மாகாணத்தில் பெண்களிற்காக தனித்துவமாக இயங்கும் 15 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்பையும் வழங்குகின்றது.

அத்துடன் இலங்கையின் வடமாகணத்திற்கு வருவாயாக வருடாந்தம் அண்ணளவாக 500 கோடி ரூபா (15 மில்லியன் அமெரிக்க டொலர்) பொருளாதார உறுதியையும் வழங்குகின்றது.

சமீபத்தில் அமெரிக்க அரசினால் அறிவிக்கப்பட்ட இலங்கை உற்பத்திகளின் இறக்குமதி மீதான 44% வரி விதிப்பால் அமெரிக்காவில் இலங்கையின் இப் பதப்படுத்தப்பட்டு தகரத்தில் அடைக்கப்பட்ட நண்டு சதையினைஇறக்குமதி செய்வதில் இறக்குமதியாளர்களிடையே தயக்கம் காணப்படுகிண்றது.

இச்சூழலானது வட மாகாண மீனவர்களின் நேரடி சந்தைவாய்ப்பையும் பெண்கள் உட்பட பல்லாயிரகணக்கான நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்பையும் உடனடி பாதிப்பிற்க்குட்படுத்துவதாக காணப்படுகிண்றது.

எனவே இதனை கருத்திற்கொண்டு, எமது அரசாங்கம் வட மாகாண மீனவர்களின் நேரடி சந்தை வாய்ப்பு, பெண்கள் உட்பட பல்லாயிரகணக்கானவர்களின் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்பு, மற்றும் வட மாகாணத்தின் பொருளாதாரம் என்பவற்றை பாதுகாக்கும் முகமாக அமெரிக்க அரசுடன் உடனடியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் ஜனாதிபதியும் குறித்த விடயத்தில் கவனமெடுத்து செயற்படவேண்டும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *