இந்தியா

பா.ம.க. தலைவராக தொடர்வேன்; அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காகவே 1989-ம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது இனக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்யமுடியும். அதனடிப்படையில் 2022ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அப்பா அவர்களின் வாழ்த்துகளுடனும், உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணைக்குழுவும் அங்கீகரித்திருக்கிறது.

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணைக்குழுவும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அப்பா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *