இலங்கையை இந்தியாவிடம் அரசு காட்டிக் கொடுத்து விட்டது; முன்னிலை சோசலி கட்சி குற்றச்சாட்டு

அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் அரசாங்கம் இலங்கையை இந்தியாவிடம் காட்டிக்கொடுத்துவிட்டது.இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் கூறுகையில்,
ஒப்பந்தங்களில் உள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கோ அமைச்சரவைக்கோ தெரியப்படுத்தாது அரசாங்கம் இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. ஒப்பந்தம் செய்யப்போவதாக மாத்திரமே அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒப்பந்தத்தின் பிரதிகூட அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கபடவில்லை.எனவே இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் சட்டவிராேதமானவை.
ஆரம்பத்தில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திதடப்படவுள்ளது என்றார்கள். பின்னர் 6 ஒப்பந்தங்கள் என்றார்கள். ஆனால் தற்போது 7 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருப்பது, வரலாற்று முக்கியமான தினத்திலாகும். அதாவது 1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே .வி.பி.நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தை பாதுகாக்க போராடி, பல உயிர்களை தியாகம் செய்த தினமாகும். அதுபோன்ற ஒரு தினத்திலே நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கிறது.
வரலாற்றில் ஜே .வி.பி.க்கு இருக்கும் நற்பெயரை பயன்படுத்திக்கொண்டே தற்போது அரசாங்கம் இந்த காட்டிக்கொடுப்பை செய்துள்ளது.
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் என்ன என்ற விடயங்களை இதுவரை வெளியிடப்படவில்லை . கைச்சாத்திடும்போது வெளியிடப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அப்போதும் வெளியிடப்படவில்லை . அதேநேரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்களிள் பிரதிகளை ஜனாதிபதி செயலாளரிடம் கடந்த வாரம் நாங்கள் கோரி இருந்தோம். இதுதொடர்பாகவும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனினும் அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கும் ஒப்பந்தங்களில் சில விடயங்கள் எமக்கு அதிகாரிகள் வழியாக கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் பல காட்டிக்கொடுப்புக்கள் உள்ளன.
குறிப்பாக மின்சாரசபை சட்டத்துக்கு அமைய எமது பிரதான மின்சார விநியோக கட்டமைப்பை வேறு நாட்டு மின்சார கட்டமைப்புடன் இணைக்க முடியாது. அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் இதனை செய்திருக்கிறது. இது எமது நாட்டின் சுயாதீன தன்மையை இல்லாமல் செய்யும் விடயம்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது காஞ்சன விஜேசேகர வலுசக்தி அமைச்சராக இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, பிரதான மின்சார விநியோக கட்டமைப்பை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.. அப்போது இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜே .வி.பி. , அதே சட்டத்தின் கீழ் தற்போது இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.பங்களாதேஷ், நேபால் நாடுகள் இந்தியாவுடன் மின்சார விநியோக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு சிக்கிக்கொண்டுள்ள நிலையில் இலங்கை தற்போது கைச்சாத்திட்டு சிக்கிக்கொண்டுள்ளது.
அதேபோன்று டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்துக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருக்கிறது. அதில் எமது அடையாள அட்டைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு எமது உயிரியல் தரவுகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான விடயம். இந்தியாவின் இந்த கம்பனியை அரசாங்கம் எவ்வாறு தெரிவு செய்திருந்தது?அதற்காக கேள்வி கோரல் விடுக்கப்பட்டிருந்ததா என எதுவும் தெரியாது.
மருந்து ஒழுங்குபடுத்தல் தொடர்பிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. இலங்கையில் மருந்து பொருட்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கே உள்ளது. இலங்கை தேசிய மருந்துபொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு இருக்கும் அதிகாரம்போன்று இந்தியாவில் பாமகோடியா நிறுவனத்துக்கே அந்த அதிகாரம் இருக்கிறது. தற்போது இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அதிகாரத்துக்கு நிகரான அதிகாரத்தை இந்தியாவின் இந்த நிறுவனத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது பாரதூரமான விடயம்.
எமது நோயாளர்களுக்கு வழங்கும் மருந்து தொடர்பான பொறுப்பை இலங்கை நிறுவனமே எடுக்கவேண்டும். மாறாக இந்திய நிறுவனத்துக்கு அதனை வழங்குவது ஆபத்து . இந்திய நிறுவனத்துக்கு இந்த அதிகாரத்தை வழங்க அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. இவ்வாறான ஒப்பந்தங்கள் மூலமே இலங்கையை இந்தியாவிடம் காட்டிக்கொடுத்திருக்கிறது என்றார்.