தனது தரப்பு இளம் எம்.பி.க்கள் ரணிலுடன் சேர்வதை தடுக்க சஜித் முயற்சி

ரணில் விக்ரமசிங்கவுடன் நட்பை பேணும் தனது இளம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தியை இணைக்கும் முயற்சில் ஈடுபடும் சிரேஷ்ட உறுப்பினர்களையும் தம் பக்கம் இணைக்கும் முயற்சிகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்தாம் ஆண்டு நிறைவில் முக்கிய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியதன் மூலம் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சமீபத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய பல இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க சஜித் நடவடிக்கை எடுத்துள்ளார். கம்பஹாவிலிருந்து முதல் முறையாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்த திறமையான, இளம் பாராளுமன்ற உறுப்பினரான பிரசாத் சிறிவர்தன, சரித் அபேசிங்க, வருண ராஜபக்ச ஆகியோருக்கு இவ்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் பிரசாத் சிறிவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியில் இன்னும் இருக்கும் பல இளம் எம்.பிக்கள் இன்னும் ரணிலைப் பின்தொடர்ந்து, அவருடன் இரகசியமாக நடந்து கொள்வதாகவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு சிலர் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க முயற்சிப்பதாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இளைஞர்களுக்கு புதிய அரசியல் பயணத்தைத் தொடங்க இடம் கொடுத்து, சிரேஷ்ட உறுப்பினர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இளைஞர்களுக்கு இடம் கொடுப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் அதிக அக்கறை காட்டவில்லை என்பதும் தெளிவாக தெரிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.