மூடநம்பிக்கையால் விஷம் குடித்து பெண் தற்கொலை

9 நாட்கள் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான நவராத்திரி கடந்த மார்ச் 30 ஆம் திகதி ஆரம்பமாகியது. வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாதவிடாய் காரணமாக நவராத்திரி பூஜை செய்ய முடியைல்லையே என்ற வருத்தத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் உத்தரப் மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் கோட்வாலி நகரத்தின் கீழ் உள்ள பன்னா லால் கோலா குவான் பகுதியில் கணவர் முகேஷ் சோனியுடன் மனைவி பிரியான்ஷா சோனி (36 வயது) வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் ஜான்வி மற்றும் இரண்டரை வயதில் மான்வி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மிகுந்த கடவுள் பக்தி உடைய பிரியான்ஷா சோனி இந்த வருட நவராத்திரியை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் போல ஆர்வமாக காத்திருந்தார். நவராத்திரி பூஜைக்காக பழங்கள், இனிப்புகள், பூக்கள் ஆகியவற்றை வாங்கி வைத்து அவர் காத்திருந்தார்.
நவராத்திரியின் முதல் நாளான கடந்த மாதம் 30 ஆம் திகதி முகேஷ் சோனியின் மனைவி பிரியன்ஷா சோனிக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இதனால் அவர் பூஜையில் பங்கேற்கவில்லை.
மாதவிடாய் காலத்தில் பூஜையில் பங்கேற்பது அசுத்தம் என்பது இந்து மதத்தில் நிலவும் பல்வேறு மூடநம்பிக்கைகளுள் ஒன்று. பிரியன்ஷா சோனியும் அதை நம்பினார். எனவே ஒரு வருடமாக நவராத்திரிக்காக காத்திருந்தும் தற்போது விரதம் இருக்கவோ, பூஜையில் பங்கேற்கவோ முடியாதது குறித்து அவர் மிகுந்த மன வருத்தத்துக்கு ஆளானார்.
அடுத்த நாள் கணவர் கடைக்கு சென்றதும் மனைவி பிரியன்ஷா சோனி விஷம் அருந்தினார். வீட்டுக்கு வந்த கணவன் அவரை மீட்டு ஜான்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தார்.
அங்கு சிகிச்சையில் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதன்பின் வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் மீண்டும் அவரது நிலை மோசமடைந்தது. மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின் போது இறந்தார்.