இலக்கியச்சோலை

வாழ்வை எழுதுதல்: வீடு வாழ்விடம் மட்டுமல்ல, அதுவும் ஒரு கனவுதான்!…. முருகபூபதி

துறவியாக வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் ஒரு தடவை இவ்வாறு சொன்னாராம்:
“ உனது பெயர் நிலைத்திருக்கவேண்டுமானால், திருமணம் செய்து பிள்ளையை பெற்றுக்கொள். அல்லது உனது பெயரில் ஒரு வீட்டை வாங்கு அல்லது கட்டிக்கொள். இல்லையேல் ஒரு புத்தகமாவது எழுது. இவற்றில் ஏதாவது ஒன்றைச்செய். நீ இறந்த பின்னரும் உனது பெயர் நிலைத்திருக்கும். “

விவேகானந்தர் சொன்ன மூன்று விடயங்களையும் நான் செய்திருக்கின்றேன். அவருடைய பெயரில் உருவாக்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயத்தில் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது முதல் மாணவனாக ( சேர்விலக்கம் -01 ) இணைத்துக்கொள்ளப்பட்டேன். அந்தப்பாடசாலைதான் மேற்கிலங்கையில் கம்பகா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்துக்கல்லூரியாகத் தற்போது திகழ்கிறது. ( அதன் ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களின் பெயரில் இயங்கிவருகிறது. )

விவேகானந்தரை எனக்கும் பிடிக்கும். அவரது ஊருக்கு நூறு பேர் குறித்த சிந்தனையின் அடிப்படையில்தான் எழுத்தாளர் ஜெயகாந்தனும் ஒரு நாவலை எழுதினார்.

வாழ்வை எழுதுதல் என்ற பத்தியை சில வருடங்களுக்கு முன்னர் எழுதினேன். தவிர்க்க முடியாத காரணங்களினால் தொடர்ந்து எழுதத் தவறிவிட்டேன்.

இந்தப்பத்தியை வீடு என்ற விடயத்தை முன்னிறுத்தியே தற்போது நான் இதனை எழுதுகின்றேன்.

எதிர்பாராதவகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு, மெல்பன் மொனாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வலதுகாலை இழந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப்பின்னர் வீடு திரும்பும்போதுதான், எனது வீட்டின் நிலை மிகுந்த கவலையை அளித்தது.

வாசலில் நான்கு படிகள். வீட்டினுள்ளே சென்றால், குளியலறை ஒரு பகுதியில், கழிவறை வேறு ஒரு பகுதியில், குளியலறையில் நின்றோ – அமர்ந்தோ குளிக்கமுடியாத நிலை. மருத்துமனையிலிருந்து என்னை விடுவிக்கும்போது, எனது வீட்டின் நிலையை கேட்டறிந்த மருத்துவர்களும் தாதியரும் எனது பிள்ளைகளிடம் “ அப்பாவை எங்கே அழைத்துச்செல்லப்போகிறீர்கள் ? “எனக்கேட்டார்கள். நான் எனது வீடு பற்றிச்சொன்னபோது, “ அங்கிருக்கும் நிலையில் நீங்கள் அங்கே செல்ல முடியாது.. “ என்றனர்.

எனது இரண்டாவது மகள் பிரியாதேவி, தங்கள் வீட்டின் கீழ் தளத்தில் குளியலறை – கழிவறை இணைந்த படுக்கை அறை இருக்கிறது. அப்பாவை அங்கே வைத்து பராமரிக்க முடியும் “ என்றாள்.

அதனையேற்றுக்கொண்டு என்னை மகள் வீட்டுக்குத்திரும்புவதற்கு அனுமதித்தனர். அதற்கு முன்னர், எனக்குத் தேவைப்பட்டவற்றை ( சக்கர நாற்காலிகள் உட்பட ) மகள் வீட்டுக்கே அனுப்பியதுடன், ஒருவரை அனுப்பி மகளின் வீட்டின் அமைப்பினையும் கண்டறிந்தனர்.
வாழ்க்கையில் மாற்றங்கள் வந்துகொண்டேயிருக்கும். இருப்பிடத்தில், கல்வியில், தொழிலில், திருமணத்தில், குடும்பத்தில்… இவ்வாறு மாற்றங்கள் வரும். அதனை ஏற்றுக்கொள்வதற்கு மனப்பக்குவமும் வேண்டும்.

பின்னாளில் நான் எனது காலை இழப்பேன் என முன்பே தெரிந்திருந்தால், மேற்சொன்ன வசதிகள் குறைந்த வீட்டை அன்று வாங்கியிருக்கமாட்டேன்.

நான் ஒன்றும் தீர்க்கதரிசியல்ல . “ மாறாது இருப்பது மாற்றம் ஒன்றுதான் “ எனவும் சொல்வார்கள்.

மனித வாழ்வில், தனிமை, இயலாமை, முதுமை, ஏழ்மை என்பவை மிகவும் கொடுமையானவை. எல்லாம் கடந்துபோகும் எனவும் சொல்வார்கள். அவ்வாறு கடக்கும்போது சந்திக்கும் நெருக்கடிகளை சமாளிக்க தன்னம்பிக்கைதான் தேவை.

இச்சந்தர்ப்பத்தில் 2001 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உடல்நலம் குன்றியிருந்த காலப்பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

அக்காலப்பகுதியில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காக அவரை வைத்து இயக்கி முதல் மரியாதை ( 1985 ) திரைப்படம் வௌியிட்ட பாரதிராஜா சென்றிருந்தார்.
அப்போது சிவாஜி கணேசன், பாரதிராஜாவைப்பார்த்து, “ நீ வீடு வைத்திருக்கிறாயா..? “ எனக்கேட்டிருக்கிறார்.

“ ஆம் அண்ணே. நான்கு வீடுகள் இருக்கின்றன. ஏன் கேட்கிறீர்கள்..? “

அதற்கு சிவாஜிகணேசன், “ ஏன் கேட்கிறேன்னா… வீட்டை வாங்கும்போதும் சரி, கட்டும்போதும் சரி…. பெரிதாக வாங்கிவிடாதே… கட்டி விடாதே. நான் வாழும் அன்னை இல்லத்தை பெரிதாக வாங்கிவிட்டேன். நாங்கள் கூட்டுக்குடும்பம். வழக்கமாக மதியம் சாப்பிட்டபின்னர், இரண்டு மணிநேரம் உறங்குவேன். மாலை நான்கு மணியளவில் எழுந்திருப்பேன். எனக்கு அருகில்தான் மனைவி கமலாவும் உறங்கினாள். நான் எழும்புவதற்கு முன்னர், அவள் எழுந்து எனக்கு காப்பி தயாரிக்க சென்றுவிட்டாள். அப்போது எனக்கு நெஞ்சு வலி வந்தது. நாக்கின் கீழ்வைக்கும் மாத்திரையை எட்டி எடுக்க முடியவில்லை. மகன்மார் ராம்குமாரையும் பிரபுவையும் கத்திக்கத்தி அழைத்தேன். எங்கள் அன்னை இல்லம் மிகவும் பெரியது. அவர்களுக்கு எனது குரல் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் கமலா வந்தாள். அதன்பிறகு இங்கே வந்து படுத்துக்கிடக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன். “

சிவாஜி கணேசன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அன்னை இல்லம் மிகவும் பிரபலமானது. தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் அமைந்த இந்த வீட்டுக்கு அன்னை இல்லம் என்று சிவாஜியே பெயர் சூட்டினார். பாசமலர் உட்பட பல திரைப்படங்களிலும் இந்த இல்லம் வருகிறது.

சிவாஜி கணேசன் 1959 ஆம் ஆண்டு கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் ஊடாக இதனை வாங்கினார் என்ற தகவலும் உண்டு. நடிகர் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது கிடைத்ததையடுத்து, சென்னை மாநகராட்சி, தெற்கு போக் சாலையை செவாலியே சிவாஜி கணேசன் சாலை’ என்று அதன் பெயரை மாற்றியது.

சிவாஜியின் குறிப்பிட்ட அன்னை இல்லத்திற்குப் பக்கத்தில்தான் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் பாலன் இல்லம் அமைந்திருக்கிறது. இங்கு நான் சென்றிருந்த சந்தர்ப்பங்களில் அந்த அன்னை இல்லத்தை பார்த்திருக்கின்றேன். ஆனால், சிவாஜி – கமலா தம்பதியரை 1990 ஏப்ரிலில் கவியரசு கண்ணதாசன் இல்லத்தில்தான் பார்த்திருக்கின்றேன்.
நாற்பத்தியிரண்டு ( 1959- 2001 ) ஆண்டுகளுக்குப்பின்னர், சிவாஜி அவர்கள் தனது அந்திம காலத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம், “ பெரிய வீடுகள் வாங்காதே “ என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

வாழ்க்கை தரும் அனுபவங்கள்தான் நாம் பெறும் புத்திக்கொள்முதல். அதனைப்பெறுவதற்கு தீர்க்கதரிசனம் உதவுவதில்லை. ஒவ்வொரு தீர்மானங்களும் அந்தந்த நேரத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப எடுக்கப்படுபவை.

ஒருவரது வாழ்வனுபவங்கள் மற்றும் ஒருவருக்கு உதவக்கூடும். “ அதனால்தான் வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை “ எனவும் சொல்கின்றோம். முதுமையில் நமக்கு என்ன நேரும், என்ன நடக்கும் என்பது தெரியாது, வேலைக்காக, பிள்ளைகளின் கல்விக்காக, குடும்பத்தில் நேரும் மாற்றங்களுக்காக வீடுகள் மாற்றப்படும். அப்போது தீர்க்கதரினம் உதவுவதில்லை.
கனடாவில் எனக்கு நன்கு தெரிந்த ஒரு நண்பர் மாடிப்படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து மரணமானார். மற்றும் ஒரு நண்பரின் மனைவியும் அவ்வாறு மரணமடைந்தார்.
அவுஸ்திரேலியாவில் அண்மையில் ஒரு நண்பர், மாடிப்படிகளில் நின்று ஒரு வேலையைச்செய்துகொண்டிருந்தபோது தவறிவிழுந்து கோமா நிலைக்கும் சென்று மீண்டிருக்கிறார்.

இப்படி பல செய்திகளைச் சொல்லலாம். வீடு வாங்கும்போது, அல்லது புதிதாக கட்டும்போது, அது மாடிவீடாக இருந்தால், கீழ்த்தளத்தில் ஒரு படுக்கை அறையுடன் குளியலறையும் கழிவறையும் இருக்கத்தக்கதாக அமைத்துக்கொள்ளுங்கள்.

இது ஒரு முன்னெச்சரிக்கைதான். விதி வலியது. சிவாஜிகணேசன் பல வருடங்களுக்கு முன்னர் வாங்கிய அந்த இல்லம் நீதிமன்ற விசாரணை வரை சென்றிருக்கிறது.

அடுத்தவேளைக்கும் உணவின்றி, நடைபாதைகளில் குடியிருக்கும் ஏழைகளுக்கு இதுபோன்ற எந்தக்கவலைகளும் இல்லை.

வீடு வாழ்விடம் மட்டுமல்ல, அதுவும் ஒரு கனவுதான் ! அந்தக்கனவு அனைவருக்கும் நல்ல கனவாக அமையட்டும் !

 

 

Loading

3 Comments

  1. அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கவியரசர்
    கண்ணதாசன் ஆக்கிய நூலைப் போன்று
    தங்கள் ஆக்கங்கள் யாவும் அனுபவமும்
    வாழ்கையும் ஆழ்ந்து படிக்கத் வேண்டிய
    வரலாற்றுப் பொக்கிஷங்கள்.இன்றைய
    இளைய தலைமுறையினர் கட்டாயம்
    வாசித்து தங்களுடைய தாய்,தந்தை
    உறவுகளுக்கு வீடுகள் அமைக்கலாம்.

  2. உங்களது உடல் வலிமையை விட மனவலிமை பல மடங்கு அதிக வலிமை கொண்டது! தலையிருக்கும் வரை எதுவும் நம்மை எதுவும் ஒண்ணும் பண்ணி விடாது. நல்ல பயனுள்ள பதிவு! எனது அப்பா நெடுந்தீவில் இரண்டு வீடுகள் கட்டினார். யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடுகள். மேசன் தச்சர் முட்டாள் வெள்ளையடிப்போர் என்போரின் வாழ்வாதாரத்திற்காக மாத சம்பளத்தில் ஒருபகுதி போய்விடும். ஒரேயடியாக கட்டி முடிப்பதில்லை. அந்த இடத்தில் உள்ள தொழிளாளர் அனைவருமே அந்த வீடுகளில் கைவைத்திருப்பர். வீடுகள் 3 பெண் பிள்ளைகளுக்குரியது. மற்றைய நாலாவது தமது பிற்கால வாழ்விற்காகவென… இறுதியில் எந்த வீட்டிலும் யாரும் வாழந்ததில்லை!!! இல்லங்கள் அனாதைகள்!!! அயலவரின்… பாதைசாரிகளின்…ஊரவரின்… வேண்டுகோளுக்காக நாலாவது வீடு…. நான் புனரமைப்பு செய்ய வேண்டியதாகிறது!

  3. எனது வாழ்வை எழுதுதல் பதிவுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் எழுதிய அன்பர்களுக்கும், வாட்ஸ் அப் மூலம் உரையாற்றியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
    வாசகரின் சிந்தனையில் ஊடுறுவும் வகையில் எழுதினால், அந்த எழுத்துகளில் தங்களையும் தேடுவார்கள். இந்த வாழ்வை எழுதுதல் பதிவு எவருக்கும் உதவினால் திருப்தியடைவேன்.
    முருகபூபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.