15 ஆவது ஆண்டில் ‘அக்கினிக்குஞ்சு ’– 05.04.2025 …. ”மனம் விட்டுப் பேசுவோம்” …. யாழ் எஸ் பாஸ்கர்.

உலகெங்கும் பரந்து வாழும் அன்பு வாசகர்களே வணக்கம்…
இணையத்தள இதழாக ‘அக்கினிக்குஞ்சு’ மலரத் துவங்கி இன்றுடன் 14 ஆவது ஆண்டு பூர்த்தியாகின்றது. மிகுந்த நம்பிக்கையுடனும் தளராத ஆர்வத்துடன் தொடர்ந்து வெளியிட்டு 15 ஆவது ஆண்டிலேயே காலடி எடுத்து வைக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்திலேயே நாம் கடந்து வந்த பாதையை சற்று பின்னோக்கிப் பார்ப்போம். சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்னர் முதுபெரும் எழுத்தாளர் எஸ்.பொ . அவர்களின் ஆலோசனை வழிநடத்தலுடன் கவிஞர் அம்பியின் ஆலோசனை மற்றும் பக்க பலத்துடனும் அச்சு ஏறிய மாசிகையாக வெளிவரத் துவங்கியது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு விரிவான பிரசுர களம் அமைத்துக் கொடுத்து எமது பயணத்தை தொடர்ந்தோம்.
பாரிய நிதி நெருக்கடிகளைச் சந்தித்தோம். 12 இதழ்களுக்கு மேல் தொடர முடியாமல் நிறுத்திக் கொண்டோம். ஆவுஸ்திரேலியாவில் முதல் முதல் அச்சு பதிப்பில் வெளிவந்த தமிழ் பத்திரிகை ‘அக்கினிக்குஞ்சு’ ஆவுஸ்திரேலியா தமிழர் வரலாற்றில் பதியப்பட்ட ஒன்றாகும்.
இன்று அக்கினிக்குஞ்சு 14 ஆவது வருடங்களைக் கடந்து 15 ஆவது ஆண்டில் காலடி எடுத்துள்ளதை நினைத்துப் பார்க்கவே மிகவும் பிரம்மிப்பாக உள்ளது.
இன்று வரை எந்த அரச உதவிகளோ, விளம்பரதாரர்கள் அனுசரணையோ அல்லது தனிப்பட்ட நபர்களின் அன்பளிப்போ எதுவும் இன்றி எனது தனிப்பட்ட வருமானத்தைக் கொண்டே வெளிவந்து கொண்டிருக்கின்றது. நானும் ஓய்வு பெற வேண்டிய காலம் கடந்தோ ஓடிக்கொண்டிருக்கிறேன்.
அக்கினிக்குஞ்சு தினமும் சிறகடித்து பறப்பதற்கு எனது முயற்சி மட்டும் அல்ல எனக்கு பின்னால் இன்னும் சிலரின் கூட்டு முயற்சியும் உள்ளது. அவர்கள் எல்லோரும் தாயகத்திலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் உழைப்பு பாரியது. அவர்களின் உழைப்புக்கு என்னால் முடிந்த சிறு தொகையை மாதா மாதம் வழங்கிக் கொண்டிருக்கின்றேன்.
எனவே அக்கினிக்குஞ்சுவின் பயணம் இன்னும் தொடர நிதி தேவை உள்ளது. அன்பான வர்த்தகர்கள், தொழிலதிபர்களுக்கு சிறு வேண்டுகோள். உங்கள் ஸ்தாபனங்களின் விளம்பரங்களை அக்கினிக்குஞ்சுவில் சிறிய தொகையில் விளம்பரப்படுத்த முடியும். இதனால் உங்கள் வியாபாரம் பலருக்கு அறிமுகமாகி விரிவடையும்.
அதேநேரம் எமக்கும் பெரும் உதவியாக அமையும். அது மட்டுமன்றி நீங்கள் தமிழுக்கும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் செய்யும் பெரும் பங்களிப்புமாகும்.
உலகெங்கும் பரந்து வாழும் வாசகர்களே அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இலவசமாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இணையத்தளம் ஒன்றினை தொடர்ந்து நடத்துவது என்பது மிகுந்த உழைப்பிலும் நிதியிலுமே தங்கியுள்ளது. எனவே எங்கள் சேவை தொடர்ந்தும் தொடர உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். சிறு துளி பெருவெள்ளம், மற்றும் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகள், கலைஞர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி அவர்கள் வாழும் போதே பெருமைப்படுத்த வேண்டும். அவர்கள் தமிழுக்கும் கலை இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் ஆற்றும் சேவை மகத்தானது அதை நாம் போற்ற வேண்டும்.
தமிழர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் பல லட்சம் பேர் வாழ்கின்றார்கள்.
இவர்களில் விரல்விட்டு என்ன கூடிய சிலரே தங்கள் நேரத்தை ஒதுக்கி பணம் தேடுவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் மொழி, இனம், கலை, கலாசாரம் , எதிர்கால சந்ததியினர் என சிந்தித்து செயல்படுகின்றனர். இப்படியானவர்களை கௌரவப்படுத்துவதே அக்கினிக்குஞ்சுவின் நோக்கமாகும். கடந்த காலங்களில் பலரை கௌரவப்படுத்தி உள்ளோம். அந்த வகையில் இவ்வாண்டு அவுஸ்திரேலியாவில் வாழும் 12 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளோம்.
மேலும் அக்கினிக்குஞ்சு ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட அம்சங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியாக எந்த தங்கு தடையின்றி 14 வருடங்களைக் கடந்து 15 ஆவது வருடத்தில் கால் பதிக்கின்றது. ஆவுஸ்திரேலிய தமிழர் வரலாற்றில் அக்கினிக்குஞ்சு மட்டுமே தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் இணைய இதழ் என்பதில் பெருமிதம் அடைகின்றோம்.
இந்தப் பெருமை என்னுடன் இணைந்து தங்கள் ஆக்கங்களை தந்து அக்கினிக்குஞ்சு சிறக்க உலகெங்கும் சிறகடித்து பறக்க பெரும் பக்கபலமாக விளங்கும் படைப்பாளிகள் அனைவருக்கும் … அவர்களுக்கு மிக்க நன்றிகள்… மற்றும் அக்கினிக்குஞ்சு வாசகர்களுக்கும் நன்றிகள்.
வணக்கம் அன்புடன் … யாழ் எஸ் பாஸ்கர்.
அக்கினிக்குஞ்சு இணையத்திற்கும் அதன் ஆசிரியருக்கும் அகவை தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகில் பல செய்தி பல்சுவை இணையத்தளங்கள் இருந்தலும் அவர்களுடைய இணைத்திற்கு அக்கினிக்குஞ்சு இணையத்தை ஒப்பிட முடியாத ஒன்று. தங்களுடைய இணையத்தளத்தில் அனைத்துமே பல்வேறு கட்டுரையாளர்களினால் எழுதப்பட்ட ஆக்கங்களாகவே காணப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் பல சங்கங்களும், தொழிலதிபர்களும் இருந்தும் அங்கு தமிழ் சம்பந்தமான பத்திரிகையோ இணையமோ ஒன்று இரண்டைத் தவிர வேரெதும் இல்øலை. அக்கினிக்குஞ்சு இணையம் அவுஸ்திரேலியாவில் முதன்மை என்று தான் நான் நினைக்கிறேன்.
வாசிக்கும் போது தெரிகிறது நீங்கள் சிறமத்திற்கு மத்தியில் வேலை செய்கின்றீர்கள் என்று தெரிகிறது.
உங்களுடைய சேவை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்..
ராஜ் கண்ணன்