இலக்கியச்சோலை

முருகபூபதி எழுதிய “வாழ்வை எழுதுதல்“ ஆக்கத்திற்கு எதிர்வினை!… இரகமத்துல்லா – மெல்பன்

மெல்பனில் வதியும் எழுத்தாளர் முருகபூபதி ஐயாவின் பதிவுகளை படித்து, பலமுறை வியந்து, கடந்து போயிருக்கின்றேன். ஆனால், அவர் அண்மையில் எழுதியிருக்கும் வீடு சம்பந்தமான பதிவு என்னை சற்று நிறுத்தி, யோசிக்க வைத்து, இதனை எழுதுவதற்கு தூண்டிவிட்டது…

இரண்டு விசயங்கள் பற்றி இங்கு என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1. விவேகானந்தர்

2. வீடு

முதலில் “விவேகானந்தர்” கூறியதாக முருகபூபதி ஐயா குறிப்பிட்டுச் சொன்ன மூன்று விசயங்கள் ( திருமணம், வீடு, புத்தகம் ) சரிதான் என்றாலும், அவற்றைத் தாண்டி வேறு சிலவும் உள்ளது என்பதை தெளிவுபடுத்த முனைகிறேன் ( சற்று அதிகப்பிரசங்கித்தனம்தான் ) முருகபூபதிக்கு மிகவும் பரிச்சயமான களமும் கூட. அதை இந்தப் பதிவின் இறுதியில் முருகபூபதி ஐயா உணர்வார்.

முருகபூபதி ஐயா பதிவிட்ட வாழ்வை எழுதுதல் வெளியான சமயம், தற்செயலாக, நான் மற்றும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான பொறியியலாளர்கள் போற்றும் வள்ளல் அழகப்ப செட்டியாரின் பிறந்த ( ஏப்ரல் 6 ) மற்றும் நினைவு தினங்கள் ( ஏப்ரல் 5 ) வந்தன.

நான் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்தவன். 1952 முதல் இன்று வரை இங்கு பயின்ற அனைத்து மாணவ, மாணவியர் இடையே யாரும் சொல்லித் தராமலேயே வள்ளல் அழகப்பாவின் குணம், எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை. May be “கொடை” எனும் போதையாகக் கூட இருக்கலாம் .

இன்றும், எங்கள் கல்லூரியில் படித்த பெருமையை நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொண்டு வருகிறோம். ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு ஆண்டு படித்த மாணவர்களும் (Batch) ஏதோ ஒரு வகையில் கல்வி சம்பந்தப்பட்ட சிறு, பெரு உதவிகளைச் செய்து வருகிறோம்.

1952 முதல், சென்ற வருடம் வெளியேறிய பொறியியலாளர்கள் வரை 72 வருடங்களில் சராசரியாக 14,000 பேர், பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த உதவிகளைச் செய்து வருகிறோம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், எங்கள் கல்லூரியில் பயின்ற மாணவர்கள், எங்களது நிறுவனர் (Founder) அழகப்பா செட்டியாரை எல்லா வருடமும் நினைவு கூர்ந்து, அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து தொண்டு செய்து, அவருடைய பெயரை நிலை நாட்டி வருகிறோம்.

விவேகானந்தர் கூறியுள்ளது போல, வள்ளல் அவர்களது பெயர், அவரது திருமணம், பிள்ளை, வீடு அல்லது புத்தகத்திற்காக நிலைத்திருக்கவில்லை. அவரது “கொடை” யும் ஒரு முக்கிய காரணம்.

முருகபூபதியும் ஆஸ்திரேலியாவில் கல்வி சார்ந்த ஒரு அமைப்பை பலரதும் ஆதரவுடன் நிறுவி, இலங்கையில் பல்லாண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியருக்கு உதவி செய்து வருகிறார் என்பதும் எனக்குத் தெரியும்.

அதனால், அவர் திருமணமாகாதவராக இருந்திருந்தாலும், வீடு வாங்காமல் இருந்திருந்தாலும், புத்தகங்கள் எழுதாமல் இருந்திருந்தாலும், அவரின் கல்வித் தொண்டு, அவரது பெயரை என்றென்றும் நிலைநாட்டிக் கொண்டு இருக்கும்.

அடுத்தது வீடு.

முதுமையில் நமது ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், உடல் உபாதைகளால் ஏற்படும் சிரமங்களுக்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்கிற அவரது கருத்தில் மாற்று சொல்லவில்லை. அவை அனைத்தும் நிச்சயம் நாம் போற்ற வேண்டிய காலத்தின் கட்டாயங்கள்.

அவருக்கு நேர்ந்த ( கால் ) இழப்பு மிகவும் துரதிஷ்டவசமானது. அதற்காக நான் வருந்துகிறேன். அதே நேரம், அந்தத் துரதிஷ்டத்தை அவர் எதிர்கொண்டுள்ள மனப்பக்குவமும், தன்னம்பிக்கையும் அலாதியானது. அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.

ஆனால், முருகபூபதி ஐயா, சிவாஜிகணேசன் கூறியதாக சொன்ன விசயம் சற்றே என்னை சிந்திக்க வைத்தது. சிவாஜிக்கு 42 வருடங்கள் கழித்து நடந்த ஒரு சம்பவத்திற்காக முன் கூட்டியே அவர் தயாராக இருந்திருக்க வேண்டுமா? அது சாத்தியமா?

அவருடைய அந்த 42 வருட “அன்னை இல்லம்” வாசம் எத்தனை ஆயிரக்கணக்கான அனுபவங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும், நினைவுகளையும் அவருக்கு அளித்திருக்கும்?

சிவாஜியை விடுங்கள். உங்களுக்கு உங்களது ( பழைய ) வீட்டில் எத்தனை எத்தனை நினைவுகள் உள்ளன? எத்தனை படைப்புகள், எழுத்தாக்கங்கள், அனுபவங்கள்.!

அவ்வளவு ஏன்… இன்று உங்களை பராமரித்து, அன்புடன் பார்த்துக் கொள்ளும் உங்கள் மகள் பிரியா தேவி, மற்றும் பிள்ளைகளின் சிறு வயது குறும்புகளும், நினைவுகளும் தந்தது அந்த “வசதிகள் குறைந்த வீடு” தானே!!

நான் சொல்ல வருவது, சிவாஜி, தமது அன்னை இல்லத்தில் ஜாலியாக 42 வருடங்கள் வாழ்ந்து, அனுபவித்துவிட்டு, பிறகு தனது அந்திம காலத்தில் பெரிய வீட்டில் இருக்காதே என்று கூறுவது “Not Fair” என்பதே.

இருக்கும் வீட்டில் நன்றாக அனுபவிப்போம்… தேவையான அளவு அனுபவங்களை பெற்றுக் கொள்வோம்… நீங்கள் சொல்வது போல, முதுமையில் கூடுதல் கவனத்துடன், வேண்டிய வசதிகள் செய்து கொண்டு ( மீண்டும் ) ஜாலியாக இருப்போம்…

நான் சொல்றது சரிதானே முருகபூபதி சார் !?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *