தகாத உறவால் மனைவி செய்த கொடூரம்!

இந்தியாவின் தெலங்கானாவில் பாடசாலை தோழனுடன் சேர்ந்து வாழ தடையாக இருப்பார்கள் என்று கருதி தனது 3 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான ரஜிதா. 55 வயதான சென்னையா என்பவர் முதல் மனைவி இறந்து விட்டதால் இரண்டாம் தாரமாக ரஜிதாவை திருமணம் செய்து கொண்டார். 12 ஆண்டுகளுக்கு முன் இவர்களது திருமணம் இடம்பெற்ற நிலையில்,
இந்த தம்பதிக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால், தாம்பத்திய வாழ்க்கையில் இடைவெளி ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ரஜிதா தான் படித்த பாடசாலையில் தன்னுடன் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இதையொட்டி நடந்த விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட அவர், பாடசாலையில் தன்னுடன் படித்த தோழன் சிவக்குமாரை சந்தித்துள்ளார்.ரஜிதா சிவக்குமாரிடம் பேசி பழக ஆரம்பித்திருக்கிறார். அந்த நட்பு மெல்ல மெல்ல காதலாக மாற அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகியிருக்கிறது.
இதற்கிடையே இரண்டு பேரும் இருசக்கரவாகனங்களில் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். அதையும் கடந்து தனியார் விடுதிகளில் அறை எடுத்து தனிமையில் இருக்க ஆரம்பித்தனர். அப்போது என்னை திருமணம் செய்து கொள் என்று ரஜிதா சிவகுமாரிடம் கேட்டிருக்கிறார். கணவன், குழந்தைகள் ஆகியோரை விட்டு விட்டு வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயார் என்று சிவக்குமார் கூறியதாகத் தெரிகிறது.
இரண்டாம் தாரமாக ஒரு வயதான நபருடன் வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டோம் என வெறுத்துப்போன ரஜிதா, சிவக்குமாருடன் சேர்ந்து புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். அதற்கு தடையாக இருக்கும் தனது 3 குழந்தைகளையும், கணவனையும் கொலை செய்து விடலாம் என்ற கொடூரமான முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதற்காக திட்டமிட்ட அவர், கடந்த 27 ஆம் திகதி தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் தயிர் சோற்றில் விஷம் கலந்து சாப்பிட கொடுத்திருக்கிறார். கணவன் சென்னையாவுக்கும் அதே தயிர் சாப்பாட்டை கொடுத்த நிலையில், அவர் எனக்குத் தயிர் பிடிக்காது என்று சொல்லிவிட்டு வெளியில் சென்று விட்டார்.
ஆனால் அந்த 3 குழந்தைகளும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு வாந்தி எடுத்த சாகும் நிலைக்கு சென்று விட்டனர். வெளியே சென்றிருந்த சென்னையா, மீண்டும் வீட்டுக்கு வந்தபோது குழந்தைகளைப் பார்த்து பதறிப் போக, குழந்தைகளுக்கும் தனக்கும் வயிற்று வலியாக உள்ளது என்று ரஜிதா பொய் சொல்லியிருக்கிறார். உடனே அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டனர்.
இந்நிலையில், மனைவியின் நாடகம் தெரியாமல் அவரை அதே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார் சென்னையா. தகவல் அறிந்து வந்த பொலிஸார் மரணங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அவர்களுக்கு முதலில் சென்னையா மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக ரஜிதா பயன்படுத்திய தொலைபேசியை வாங்கி ஆய்வு செய்தபோது அவர் தொடர்ந்து சிவகுருமாருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது.
எனவே ரஜிதாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி ரஜிதா தன் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, ரஜிதாவை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். காதலனுடன் செல்ல விரும்பினால் குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும் என கணவன் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.