யாழில் தனியார் காணிக்குள் அத்துமீறி புகுந்து மரம் வெட்டிய இராணுவத்தினர்

தனியார் காணியொன்றினுள் அத்துமீறி மரம் வெட்டிய இராணுவத்தினருக்கு எதிராக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி பகுதியில் உள்ள சேமக்காலை ஒன்றினுள் எதுவித அனுமதியும் பெறாமல் உட்புகுந்த இராணுவத்தினர், அங்கிருந்த வாகை மரத்தினை வெட்டியுள்ளனர்.
இதுதொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு பிரதேசவாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டு இது தொடர்பில் அறிய முற்பட்டபோது வாகை மரம் வெட்ட எம்மிடம் அனுமதி பெறத் தேவையில்லை ஆனால், மரத்தைக் கொண்டு செல்ல தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
மரத்தை வெட்டிய இராணுவத்தினரிடம், மரம் வெட்டுவதற்கு உரிமையாளரிடமிருந்து பெற்ற அனுமதிக் கடிதத்தை தருமாறு மூன்று மணித்தியால கால அவகாசம் கொடுத்துள்ளனர். காணியின் உரிமையாளரை நாட இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து மானிப்பாய் பொலிஸாரை தொடர்பு கொண்ட பொழுது இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வனவள பாதுகாப்பு திணைக்கள யாழ். மாவட்ட அதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாகவும் வாகை மரம் வெட்ட தம்மிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் வழித்தட அனுமதியினை மாத்திரமே பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.