கவிதைகள்

மாமருந்தாய் வந்தமைந்த மாமணியே!…. கவிதை… ஜெயராமசர்மா

செம்பவள வாய்திறந்து
சிரித்துநிற்கும் உன்முகத்தை
தினமுமே பார்த்திருந்தால்
சிந்தனையே தெளிந்துவிடும்
வந்தநோ ஓடிவிடும்
வலியனைத்தும் மறைந்திடுமே
எந்திருவே உனையணைத்து
என்னாளும் இன்புறுவேன் !
முழுநிலவு வடிவான

அழகுநிறை உன்முகத்தை
முத்தமிட்டு முத்தமிட்டு
மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே
கொழுகொழுத்த கையாலே
குறும்புநீ செய்கைகையிலே
ஒழுகிவரும் இன்பமதை
உள்ளமெலாம் நிரப்பிடுவேன் !
பொட்டுவைத்துத் தலைசீவி

புதுச்சட்டை போட்டுனக்கு
மெத்தையென என்மடியில்
விரல்சூப்ப விட்டிருப்பேன்
சூப்பிவிட்டு துப்புகின்ற
எச்சிலெனை நனைக்கையிலே
பார்க்கின்ற அத்தனையும்
பரவசமாய் தெரியுமப்போ !
மழலை மொழிபேசி

மயக்குவாய் எனைநீயும்
மாமருந்தாய் வந்தமைந்த
மாமணியே நீயெனக்கு
மாதவத்தால் உனப்பெற்றேன்
வாழ்வெல்லாம் மகிழுகின்றேன்
வையகத்தில் நான்வாழ
வாய்த்துள்ளாய் குலவிளக்காய்….!

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.