முச்சந்தி

உள்நாட்டு போரால் உருக்குலையும் மியான்மாரில் நிலநடுக்க கோரம்!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

இராணுவ (ஜுன்டா- Myanmar Junta) ஆட்சியில் உள்ள மியான்மரில் உள்நாட்டு போரும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தற்போது அங்கு நடந்த நில நடுக்கத்தின் காரணமாக முழு நாடே நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னைய பர்மாவான தற்போதய மியான்மாரில் ஆளும் ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக பல்லின கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களை தற்போது நிலநடுக்கம் மேலும் பாரிய இன்னலுக்கு தள்ளி உள்ளது.
நிலநடுக்கத்தின் பின்னரான போர் நிறுத்தம்:
இயற்கையின் சீற்றத்தை சீர் செய்யும் வகையில், ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் மியான்மரின் ஆயுதப் பிரிவான மக்கள் பாதுகாப்புப்படை, இரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.
மேலும் நிலநடுக்க மீட்புப் பணிகளை எளிதாக்கும் வகையில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தற்காலிக மீட்பு மற்றும் மருத்துவ முகாம்களை நிறுவுவதை உறுதி செய்ய ஐ.நா. மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தொடரும் உள்நாட்டுப் போர்:
மியான்மர் ஒரு பல்லின நாடு. மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர்
பெரும்பான்மையின பௌத்த மக்கள் ஆவர். மீதமுள்ள மக்கள் மங்கோலிய, திபெத்திய-பர்மிய, தாய், மோன்-கெமர் மொழிகளைப் பேசுகின்றனர்.
காலனித்துவ ஆட்சியின் போது, பிரித்தாளும் தந்திரமாக பிரிட்டிஷ், பர்மாவில் பல தேசிய சிறுபான்மையினராக இருந்த மக்கள் இடையே முரண்பாடுகளை உருவாக்கி ஆங்கிலேயர்களால் ஆழ முடிந்தது.
காலனி ஆட்சியில் பர்மாவின் சுய நிர்ணய இறையாண்மையை பிரகடனப்படுத்துவது தேசிய சிறுபான்மையினர் தங்கள் தேசிய சுதந்திரத்திற்கான வாய்ப்பாக உணரப்பட்டது. அத்துடன் பிரிவினைவாத உணர்வுகள் பிரிட்டிஷாரால் தீவிரமாக தூண்டப்பட்டன. அவர்கள் காலனித்துவ நிர்வாகம் வெளியேறுவதற்கு முன்பு பல பர்மிய மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிப்பதாக உறுதியளித்தனர்.
அக்காலத்திலேயே மத்திய அரசுக்கு எதிர்ப்பு மையம் ஒன்று பர்மாவின் தென்கிழக்கில், கரேன் மாநிலத்தில் எழுந்தது. இந்த பிரதேசத்தின் முக்கிய மக்கள் கரேன் மக்கள், அல்லது திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் கரேன் கிளையைச் சேர்ந்த தேசியங்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்ந்தனர்.
2021 இராணுவப் புரட்சி :
2021 மியான்மர் இராணுவப் புரட்சியின் பின்னர், ஆளும் சர்வாதிகார இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராக மியான்மர் மக்களின் பல ஆயுதக் குழுக்கள் போராடி வருகின்றன.
தொடரும் இக் கொடிய போரில் டிசம்பர் 2024 வரை 80000 மேலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30,00,000 வரை வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ளனர். மேலும் 1,13,700 மக்கள் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ளனர்.
2020 மியான்மர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி மிகப் பெரும்பான்மையான (83%) தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாய முன்னணி கட்சி வெற்றி பெற்றது செல்லாது என மியான்மர் இராணுவம் குற்றம் சாட்டியதுடன், 1 பிப்ரவரி 2021 அன்று இராணுவப் புரட்சி மூலம் அரசை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தியும், நாடாளுமன்றத்தை முடக்கியும், ஆங் சான் சூச்சியை வீட்டுக் காவலில் வைத்தனர். இதனால் நாடு முழுவதும் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களும், வன்முறைகளும் எழுச்சி பெற்றது.
இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களால் மார்ச் 2023வரை எல்லைப்புற மாநிலங்களில் வாழும் 17.5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்றும், 1.6 மில்லியன் பொதுமக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும்; 55,000 குடியிருப்புகள் குண்டு வீச்சுகளால் அழிந்துள்ளது என ஐ. நா. மதிப்பீடு செய்துள்ளது.
மியான்மரிலிருந்து 40,000 பேர் அண்டை நாடுகளான வங்காளதேசம், இந்தியா, தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளில் மக்கள் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
அக்டோபர் 2023 வரை மியான்மரின் 40% நிலம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பங்கு 330 உள்ளாட்சிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது
நீண்ட காலமாக தொடரும் உள்நாட்டு யுத்தத்த்தின் விளைவால் பாதிக்கப்பட்ட மக்களை தற்போதைய நில நடுக்க இயற்கை அனர்த்தமும் வெகுவாக பாதித்துள்ளது.
மியான்மர் பாரிய நிலநடுக்கம்:
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 28ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மர் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச நாடுகள் உதவி செய்து வருகின்றன.
நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 3000 மேலான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளதாகவும், பத்து ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்தன
இந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் கனரக எந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் தண்ணீர் விநியோகம், சுகாதார உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சுவாச தொற்றுகள், தோல் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள், தட்டம்மை போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதிகளில் 700 பேர் பலி
மியான்மர் நிலநடுக்கத்தின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதி கூடிய ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலநடுக்கத்தால் பல ஆயிரம் பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு, பலி எண்ணிக்கை பல மடங்கு உயரும் என, கணித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது அப்போது நாடு முழுவதும் பல்வேறு மசூதிகளில் வெள்ளிக் கிழமை தொழுகை நடந்தது. தொழுகையில் ஈடுபட்டு இருந்த 700 பேர் உயிரிழந்தனர். பழைய காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான பல மசூதிகள் மிகவும் சேதம் அடைந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.