தமிழ் தேசிய கட்சிகளுடன் மோடி நாளை சந்திப்பு

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நாளை சனிக்கிழமை (5) பிற்பகல் 3மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கை வரவிருக்கும் இந்திய பிரதமர் மோடி,ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வடக்கு – கிழக்கு, மலையக அரசியல் தலைவர்களை சந்திக்கவிருக்கிறார்.
இந்நிலையில் நாளை சனிக்கிழமை மாலை தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களை கொழும்பில் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் இருவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த வேளையில் 13 ஆவது திருத்த சட்டம் சம்பந்தமாக எந்த பேச்சும் இடம்பெறவில்லை.அதேபோல் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திலும் 13 குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பேசமாட்டார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ் தேசிய தலைவர்கள் மோடியுடனான சந்திப்பிற்கு எவ்வாறு தங்களை தயார்படுத்திக்கொண்டு அல்லது எவ்வாறான திட்டத்துடன் சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் பரப்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது.