இலங்கை

தாக்குதல் பிரதான சூத்திரதாரி; தேர்தல் குண்டா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவதாக கூறிக்கொண்டு இதனை தேர்தல் காலத்து குண்டாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜக்கியக் குடியரசுக் கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பாளிகள் தொடர்பான தகவல்களை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அவ்வாறான ஒன்று நடக்குமாக இருந்தால் அது மிகவும் நல்லதே. ஆனால் தேர்தல் காலத்தில் தேர்தல் குண்டாக எதனையாவது செய்வது என்றால் அது தவறாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளில் இன்னும் மறைந்து இருப்பவர்கள் இருந்தால் அவர்களை கண்டுபிடிப்பது திறந்த செயற்பாடுகளின் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை சுவிற்ஸர்லாந்தில் இருப்பதாக கூறப்படும், பிள்ளையானின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலான வெளிநாட்டு தொலைக்காட்சியொன்றுக்கு இது தொடர்பில் கூறியுள்ளார். அவரை இலங்கைக்கு கொண்டுவந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அது நடக்கப் போகின்றதா என்றும் தெரியவில்லை.ஆனால் அரசியல் உதைபந்தாகவோ தேர்தல் குண்டாகவோ இனியும் இதனைப் பயன்படுத்தக் கூடாது.

கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை இத்துடன் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும். இதனை தேர்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தாது சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நான் அவ்வாறான சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. சம்பவத்தின் பின்னரே எனக்குத் தெரியும். பாதுகாப்பு தரப்பினருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதுபற்றி எங்களுக்கு கூறியிருக்கவில்ல.

அத்துடன் ஜே.வி.பியின் 6 எம்.பிக்களும் அந்த பாராளுமன்றத்தில் இருந்தனர். அவர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளாவிட்டாலும் கட்சித் தலைவர்கள் என்ற ரீதியில் இந்த தகவலை நிச்சயமாக பெற்றிருப்பர். இந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தவர்கள் தொடர்பில் மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டு இதனை பிச்சைக்காரனின் புண் போன்று மாற்றிவிட வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *