இலங்கை

அதிகாரத்துடன் பொறுப்பு தந்தால் பாதாள உலகக் கும்பலை ஒழித்துக் காட்டுவேன்

தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏதாவது பொறுப்பு அதிகாரத்துடன் எனக்கு வழங்கப்படுமாக இருந்தால் நாட்டில் பாதாள உலகக் கும்பலை ஒழித்துக் காட்டுவேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பொன்சேகாவிடம் தேசிய பாதுகாப்பு நிலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இராணுவத்தை ஈடுபடுத்தும் அளவுக்கு தேசிய பாதுகாப்பில் பிரச்சினைகள் கிடையாது. ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்தில் பிரச்சினையொன்று உள்ளது. குறிப்பாக பாதாள குழுவினர் மற்றும் சட்டவிரோத ஆயுததாரிகள் சுதந்திரமாக செயற்படுவதுடன், அவர்கள் தனிப்பட்ட கோபங்கள் மற்றும் போதைப் பொருள் நடவடிக்கைகளுக்காக கொலைகளில் ஈடுபடுகின்றனர்.

எவ்வாறாயினும் நாட்டின் சட்டம் செயற்படுத்தப்படுமாக இருந்தாலும், பொலிஸார் செயற்படுவார்களாக இருந்தாலும் இவ்வாறான விடயங்கள் நடக்காது. மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழும் சூழல் உருவாகவில்லை. இதனால் பிரச்சினையொன்று உள்ளது.

அரசாங்கத்திற்கு இதனை கட்டுப்படுத்தம் நோக்கம் இருந்தாலும் அதனை செய்ய முடியவில்லை. துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இவற்றை நிறுத்த வேண்டும். இதில் இறங்கி வேலை செய்ய வேண்டும். யுத்தத்தில் நாங்கள் செயற்பட்டதை போன்று அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் எதிர்பார்க்கும் அரசியலை எவராவது செய்வார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் யாரும் அதனை செய்யவில்லை. பிரஜையென்ற வகையில் அதிகாரத்துடன் ஏதேனும் பொறுப்பு கிடைக்குமாக இருந்தால் அந்த பொறுப்பை ஏற்பேன். 30 ஆயிரம் பேர் வரையிலான பயங்கரவாதிகளை ஒழிக்க முடியுமாக இருக்குமாக இருந்தால் பாதாள உலக கும்பலை சேர்ந்த 1500 பேரை ஒழிப்பது கடினமானதாக இருக்காது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *