இலங்கை

கதிர்காமத்திலுள்ள வீட்டினால் கோதாபயவும் சிக்குவாரா?

கதிர்காமத்திலுள்ள சர்ச்சைக்குரிய வீடு தன்னுடையது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ கூறினாலும், அந்த வீட்டின் மின்சாரக் கட்டண பட்டியலில் அவரின் பெயரே இருக்கின்றது என்றும், இதனை அடிப்படையாகக் கொண்டு கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலையொட்டி திஸ்ஸமஹராமவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் ஆட்சிக்கு வரும் போது எங்களுடனான வெளிநாட்டு தொடர்புகள் இல்லாமல் போகும், முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், முதலீட்டார்கள் நாட்டை விட்டு போய்விடுவர், நாட்டில் டொலர் இல்லாமல் போகும் என்றெல்லாம் சிலர் நினைத்தனர். ஆனால் அவர்கள் நினைத்தவற்றை மாற்றி நாங்கள் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இப்போது அவர்கள் அழுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் முறையாக திட்டங்களை தயாரித்து பயணிக்கின்றோம். இதனை பாதுகாத்து பலமாக முன்னால் கொண்டு செல்ல வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலத்திற்கான பாதையாகும்.

இப்போது ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்தியுள்ளோம். வீண் செலவுகளை கட்டுப்படுத்தியுள்ளோம். முன்னர் இருந்தவர்கள் எந்தளவுக்கு நிதியை வீணடித்துள்ளனர் என்பது இப்போது தெரிகின்றது. எவ்வளவோ கொள்ளையிடப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன இணைந்து விசாரணைகளை முன்னெடுகின்றன. அவர்கள் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். நீதிமன்றம் தண்டனை வழங்கும்.

அதிகமாக பயத்தில் இருப்பவர்களே அதிகமாக கத்துபவர்களாக இருக்கின்றனர். தான் கைது செய்யப்படப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே சொல்லித் திரிகின்றார். விசாரணைகளின்படி அவர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்களே. இப்போது வரையில் முன்னாள் அமைச்சர்கள் மூவர் விளக்கமறியலில் இருக்கின்றனர். பொலிஸ்மா அதிபரும் விளக்கமறியலில் இருக்கின்றார். இந்நிலையில் இன்னுமொரு முன்னாள் அமைச்சர் தலைமறைவாக இருக்கின்றார். அவர் எப்போதாவது வெளியில் வந்தே ஆக வேண்டும். சிறப்பாக இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன. சாட்சியங்களுடன் வழக்குகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை கூடிய விரைவில் கதிர்காமம் வீடு தொடர்பான வழக்கும் வரும். குறித்த வீட்டில் எவரும் வசிக்கவில்லை. ஆனால் அந்த வீட்டின் சுவருக்கு அருகில் மின்சாரக் கட்டண பட்டியலொன்று காணப்பட்டது. அதனை வீதியில் சென்ற ஒருவர் எடுத்துச் சென்றுள்ளதுடன், அது எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டண பட்டியலில் நந்தசேன கோதாபய ராஜபக்‌ஷ என்ற பெயர் உள்ளது. ஆனால் வீடு அவருடையது அல்ல என்று கூறுகின்றார். அடுத்தவர் வீட்டுக்கு இவர் மின்சாரக் கட்டணத்தையா செலுத்துகின்றார். இது தொடர்பான விசாரணை நடக்கின்றது.

வனப்பாதுகாப்பு இடத்தில் எவ்வாறு காணி பெற்றுக்கொள்ளப்பட்டது, அந்த வீட்டை கட்டுவதற்கான பணம் எப்படி கிடைத்தது. என்பன தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். இவை மக்களின் சொத்துக்களே. மின்சாரக் கட்டண பட்டியல் போன்று நீர்க் கட்டண பட்டியலும் உள்ளது. கேட்கும் போது அது அவருடைய வீடு அல்ல என்று கூறுகின்றார். ஆனால் அவரின் வீடு என்பதனை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சிக்கின்றோம்.

இந்த விசாரணைகள் எதனையும் நாங்கள் கைவிடப் போவதில்லை. அனைத்த விசாரணைகளையும் முன்னெடுப்போம். தாஜுதீன் மரணம் போன்ற சம்பவங்களின் சாட்சியாளர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். எனினும் விசாரணைகளை முன்னெடுக்க நாங்கள் முயற்சிக்கின்றோம்.

ஊழலை நிறுத்தவும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மட்டுமே முடியும். அதன்படி நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *