தமிழர்களுக்கு எதிரான போரில் ஜே.வி.பி.யும் யுத்தக் குற்றவாளியே

தமிழர்களுக்கு எதிரான போரில் ஜே.வி.பி.யினரும் யுத்த குற்றவாளிகளே என்பதனால் தமிழர்களை பொறுத்தளவில் சர்வதேச குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தின் ஊடாக அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே நீதி பெற்றுக் கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 37ஆ வது நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடி பகுதியில் அமைந்துள்ள அன்னாரினது சமாதியில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற அஞ்சலி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பட்டலந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 90வீதமானவர்கள் ஜே.வி.பி. உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள்.இவர்கள் இன்று ஆட்சி பீடம் ஏறி இருக்கின்ற நிலையில் இந்த சம்பவங்களுக்கு தங்களுக்கு இருக்கக்கூடிய தங்களுடைய அரச கட்டமைப்பின் ஊடாக நீதி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அவர்கள் நேர்மையாக செயல்பட்டார்களாக இருந்தால். நிச்சயமாக நடைபெற்ற அந்த அநீதிகளுக்கு நீதி கொடுக்கப்பட வேண்டும்.
அவர்கள் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதற்காக ஊடகங்கள் அந்த சம்பவங்களை உண்மை தன்மையாக வெளிப்படுத்துகின்றது என்பதற்காக அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெற்ற விடயங்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப் போவதும் இல்லை. அதைப்பற்றி பேசப்போவதுமில்லை. அவ்வாறு விவாதங்கள் இடம்பெற்றாலும் கூட ஒரு பொழுதும் குற்றவியல் நடவடிக்கைகள் மூலமாக தண்டனைகள் வழங்கப்பட போவதில்லை.
ஆகவே ஊடகங்கள் கூட அந்த சம்பவங்களை உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தப் போவதில்லை பட்டலந்தவில் இடம் பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவருகின்ற போது இவர்களுக்கு எப்படியாவது தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பயங்கர கோபம் வருகின்றது. இந்த சம்பவங்களுடன் ஒப்பிடுகின்ற போது வடக்கில் 50,60 ஆண்டுகளாக சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த சம்பவங்களை ஆய்வு செய்து வெளியிடுவார்களாக இருந்தால் நான் நினைக்கின்றேன் 30 வருடங்கள் ஊடகங்கள் தொடர்ச்சியாக அந்த கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்க முடியும் அந்த அளவிற்கு கொடூரங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அந்தப் வகையில் பட்டலந்த விடயத்திற்கு கட்டாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் தமிழர்களை பொறுத்தளவில் எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை மூலமாக நீதிமன்றத்தின் ஊடாக அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரம் தான் நீதி பெற்றுக் கொள்ள முடியும். ஏனென்றால் தமிழர்களது விவகாரத்தில் ஜே.வி.பி.யினரும் யுத்த குற்றவாளிகளே. நாட்டை ஆண்டவர்கள் அனைவருமே குற்றவாளிகளாக இருக்கின்ற காரணத்தினால் இராணுவ தரப்பில் இருந்த அனைத்து இராணுவத் தளபதிகளும் இனப்படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களுக்கு எதிரான இந்த விடயத்தில் ஒருபோதும் உள்ளக பொறிமுறை மூலம் தீர்வு கிடைக்காது. எங்களுக்கு சர்வதேச நீதிமன்ற பொறிமுறையின் ஊடாகத்தான் நீதி கிடைக்கும் என்றார்.
![]()