மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தியோரை பாதுகாக்கவே ‘சிவப்பு’ கட்சியும் முயற்சி

பிரிட்டனின் தடை தொடர்பான தேசிய மக்கள் சக்தி அரசின் வெளிவிவகார அமைச்சரின் கருத்தானது சிவப்பு கட்சியை சேர்ந்தவர்களும் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்கும் வகையிலேயே உள்ளதென இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் கூறுகையில்,
பிரிட்டன் அரசு 4 பேருக்கு எதிராக அதாவது இராணுவ படையினை சேர்ந்தவர்கள் 3 தளபதிகள் மற்றும் கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பயணத் தடையினை விதித்துள்ளது. அந்த வகையில் பார்க்கின்ற போது யுத்தம் முடிவுற்று 16 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டன் அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதன் அடிப்படையில் இந்த தடையை விதித்துள்ளது
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நான்காயிரம் நாட்களுக்கு மேல் அதிகமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள் தங்களுடைய உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது மனித உரிமை பேரவலம் இடம் பெற்றிருக்கின்றது மனித உரிமை மீறப்பட்டு இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் இந்த அடிப்படையில் உள்நாட்டு பொறிமுறை மூலமாக இவற்றையும் கண்டுகொள்ளாத நிலையில் பிரிட்டன் அரசு இந்த நால்வருக்கு எதிராக தடையினை விதித்துள்ளது என்ற விடயம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாகவும் பாதிக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாகவும் பார்க்கின்ற போது அவர்கள் இந்த விடயத்தை வரவேற்கின்றனர்.
இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை அரசு என்ன சொல்லப் போகின்றது என்று நாங்கள் அவதானித்துக் கொண்டிருந்தோம் அந்த நிலையில் வெளியுறவு அமைச்சராக இருக்கின்ற விஜித ஹேரத் பிரிட்டனின் பயண தடை என்பது ஒரு தலைப்பட்சமானது என்று கூறியிருக்கின்றார்.
இந்த அரசாங்கங்கள் கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் , காணாமல் போகச்செய்தவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளன.
உண்மையில் பார்க்கப் போனால் கடந்த காலத்தில் இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற தளபதிகள் முப்படை தளபதிகளாக , இராணுவத் தளபதிகளாக ,கடற்படை தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்,ஆளுநராக கூட நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாவது இந்த விடயத்தில் கவனம் செலுத்துமோ என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற போது வெளியுறவு அமைச்சர் இந்த பயண தடையை ஏற்படுத்தியது ஒருதலைப் பட்சமான முடிவு இதனை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறியிருக்கின்றார். ஏனெனில் இந்த சிவப்பு கட்சியை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியினரும் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்கவே செயல்படுகிறார்கள் என்பது புலனாகின்றது.
எனவே சிங்கள தலைமைகள் என்பது நீல கட்சியாக இருந்தால் என்ன பச்சைக் கட்சியாக இருந்தால் என்ன சிவப்பு கட்சியாக இருந்தால் என்ன தமிழ் மக்கள் தொடர்பாக மனித உரிமைகளை மீறியவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற விடயத்தை விடுத்து அவர்களை பாதுகாக்கின்ற விடயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அண்மையில் வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்திலிருந்து நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
அது மட்டும் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்தத்தை நடத்தியவர் அல்லது தீர்மானங்களை எடுத்தவர் நான் தான் என்று கூறுகின்றார் அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியவர்கள் தான் இந்த தளபதிகள் என்று கூறுகின்றார். ஆகவே இந்த தளபதிகள் செய்து இருக்கின்ற அனைத்துக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உரிமை கோருகின்றார். நடைபெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் அல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என கூறுகின்றார் ஆகவே இந்த அப்பாவி மக்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டும் கொல்லப்பட்டு இருப்பதையும் எடுத்துக் கொண்டால் இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று சொல்வதற்கு முன்னால் ஜனாதிபதி முனைகின்றார் என்றார்.
![]()