இராணுவத்தை பாதுகாக்க மக்கள் திரள வேண்டும்; ஈழத்திற்கான கனவை நனவாக்க முயற்சி –

இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அவர்களை பாதுகாப்பதற்காக நாங்கள் எப்போதும் முன்னிற்போம் என்று தெரிவித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாடு என்ன என்பதனை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய, விடுதலைப் புலிகளின் கிழக்கு ஆயுதப் பிரிவின் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரிட்டனில் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் சர்வதேச ரீதியில் பிரிவினைவாதம் முடிவுக்கு வரவில்லை. விடுதலைப் புலிகளுக்கு பின்னால் உள்ள டயஸ்போராக்கள் மற்றும் சர்வதேச அரசியல்வாதிகள் அரசாங்கத்தை கவிழ்க்கவும், ஆட்சியை அமைக்கவும் தமது ஒத்துழைப்புகளை வழங்குகின்றனர். இதன்படி ஒவ்வொரு நாட்டினதும் அரசியல்வாதிகள் தமது அரசாங்கத்தின் ஊடாகவோ தமது நிர்வாக கட்டமைப்பின் ஊடாகவோ எமது நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதத்தை உருவாக்கி ஈழத்திற்கான கனவை நனவாக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் அதனை காணாதது போன்று இருக்கின்றது. இல்லையென்றால் தேர்தல் காலத்தில் டயஸ்போராக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்று நோக்கத்தில் செயற்படுகின்றதா என்ற சந்தேகமும் உள்ளது. எவ்வாறாயினும் இதுவரையில் அரசாங்கத்தை நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு அறிவிக்கவில்லை. இதனால் முதலாவது அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
இராணுவத்தினர் நாட்டுக்காகவே போராடினர். இதற்கு தேவையான அரசியல் தலைமைத்துவத்தை மகிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. அந்த உத்தரவுகளை செயற்படுத்துவதையே இந்த அதிகாரிகள் செய்துள்ளனர். இறுதியில் உத்தரவுகளை செயற்படுத்தியவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலரை இலக்கு வைத்து போர் குற்றச்சாட்டில் குற்றவாளியாக்க முயற்சிக்கப்படுகின்றது.
இது தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான பிரச்சினை கிடையாது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுக்கும் இலங்கையருக்கும் இடையில் இருந்த பிரச்சினையாகும். நாங்கள் பயங்கரவாதிகளுடனேயே போரிட்டோம். ஆனால் டயஸ்போராக்களிடம் பணம் பெறும் சிலர் இதனை தமிழ், சிங்கள மக்கள் இடையிலான பிரச்சினையாக காட்ட முயற்சிக்கின்றனர். இதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை.
எவ்வாறாயினும் நாங்கள் இராணுவத்தினருக்காக முன்னிற்போம். இந்த விடயத்தில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்பதுடன் மக்கள் இராணுவத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.
![]()