உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கொலையாளிகளே ஆட்சியமைத்தனர்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றவாளிகளே, அந்தச் சம்பவத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, சாட்சியங்களை மூடி மறைத்துள்ள நிலைமையிலேயே தாம் அரசாங்கத்தை பொறுப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் மந்தக் கதியில் நடப்பதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்காவிட்டால் வீதிக்கு இறங்க நேரிடும் என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் கூறியுள்ளமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பேராயர் கூறுவதை எதிர்மறையாக நாங்கள் பார்க்கவில்லை. அவர் கூறுவது உண்மையே. பாதிக்கப்பட்ட தரப்பினர் என்றவகையில் அவர் கூறுவது மிகவும் நியாயமாதே. அரசாங்கம் என்ற ரீதியில் அது தொடர்பான பொறுப்பு உள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகளை வரும் காலத்தில் பார்க்கலாம்.
இந்தத் தாக்குதல் நடைபெற்று சாட்சியங்கள் மிகவும் தெளிவாக இருந்து, குற்றவாளிகளை அடையாளம் காணக்கூடிய மிகவும் இலகுவான சூழலில் நாங்கள் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. கொலையாளிகளே இந்த சம்பவத்தை பயன்படுத்தி அரச அதிகாரத்தை பெற்றுக்கொண்டு சாட்சியங்களை மூடி மறைத்த நிலைமைக்குள்ளேயே நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளோம். அதேபோன்று சாட்சியங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் காலைக்கப்பட்டுள்ள நிலைமையிலேயே நாங்கள் வந்துள்ளோம். எனினும் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 7 மாதங்களில் இது தொடர்பில் நடத்தியுள்ள விசாரணைகள் தொடர்பில் ஓரளவு திருப்தியடைகின்றோம். ஆனாலும் இன்னும் தீர்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களம் அதனை முன்னெடுத்துச் செல்கின்றது என்றார்.
![]()