முச்சந்தி

தமிழர்-கொரியர் உறவின் பாலமாக அமைந்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் கொண்டாட்டம்..!!

தென்கொரியாவில் வாழும் தமிழ் உறவுகள் தமிழ்நாட்டில் பொங்கலை முடித்த கையோடு, கொரியாவின் தலைநகர் சியோல் மாநகரிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடிக் களித்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழர் பண்பாட்டினை நேசிக்கின்ற கொரியர்களும் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது உள்ளபடியே தமிழர்-கொரியர் கலாச்சாரத் தொடர்பைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.

கொரிய தமிழ்ச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 ஆண்டிற்கான பொங்கல் நிகழ்ச்சியானது, திட்டமிட்டபடியே, 23 பிப்ரவரி ஞாயிற்றுக் கிழமையன்று, சியோல் மாநகரில் சியோல் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் கொரியாவில் வாழும் தமிழர்கள் மற்றும் கொரிய நாட்டைச்சேர்ந்த பெரியவர் மற்றும் சிறியவர்களின் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். கொரிய தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா அரங்கத்தில் குழுமியிருந்த மக்களை வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக புத்த கயா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், பொமொசா அருங்காட்சியகத்தின் துணை இயக்குநருமாகிய மேன்மைமிகு புத்த துறவி தோ மியொங், பேராசிரியர் இ ஹியொன் ஓ, இந்தியத் தூதரகம் மற்றும் சமூக விவகாரங்கள் பிரிவின் தலைவர் திருமிகு சு. சுரேஷ் குமார் அவர்கள், இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதுவர் திருமிகு நிஷி காந்த் சிங் ஆகியோர் பங்கேற்றார்கள்.

புத்த துறவி தோ மியொங் அவர்கள் தமது உரையில், தாம் இந்தியக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், தமிழர் திருநாளாம் பொங்கலும், கொரியர்களின் சுசொக் விழாவும் கொண்டாட்ட முறையில் ஒன்றுபோல் இருப்பது தமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டார். கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் அரவிந்த ராஜா தனது தலைவர் உரையில் சங்கத்தின் செயல்பாடுகளையும், எதிர்காலத் திட்டமிடல்களையும் விவரித்தார்.குறிப்பாக கொரியாவில் கொரிய தமிழ்ச் சங்கம் செய்து வரும் தமிழ்ப் பணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களான உதவிகள் குறித்து விளக்கினார்.கொரியாவில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் திட்டத்தை பற்றியும் அதற்கு செய்து வரும் பூர்வாங்க வேலைகளை பற்றி எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களை மகிழ்விக்கும் விதமாக காலை முதல் மாலை வரை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும், பல்வேறு குழும விளையாட்டுப் போட்டிகளும், குலுக்கல் முறையில் தேர்வுப் பரிசுகளும் இடம்பெற்றிருந்தன.சங்கத்தால் முதன்முறையாக முன்னெடுக்கப்பெற்ற சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம், கொரிய கலாச்சாரத்தின் தாக்கம் பரிணாமமே! பகட்டே! என்ற தலைப்பில், முனைவர் இரா. இராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது.

கொரிய தமிழ்ச் சங்கத்தின் ‘கற்க கசடற’ என்னும் இணையவழித் தமிழ் கற்றல் திட்டத்தின் கீழ் பயிலும் சிறார் மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு அறிவுசார் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழுடன் சிறப்பிக்கப்பட்டார்கள். மாலையில் சங்கத்தின் இணைச் செயலாளர் (நிகழ்ச்சி திட்டமிடல்) திரு சம்பத் குமார் நன்றியுரை வாசிக்க விழா இனிதே நிறைவடைந்தது.

சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இப்பொங்கல் நிகழ்ச்சிக்கு, கல்வியாளர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் பலர், அழைப்பிதழ்பேரில் வாழ்த்துச்செய்தியினை காணொளியாகவும், மடலாகவும் அனுப்பிச் சிறப்பித்தார்கள். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு தி. வேல்முருகன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு வைகோ, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்,அதிமுக முன்னாள் அமைச்சர் திரு வைகைச் செல்வன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு செந்தமிழன் சீமான், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன்,வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (VIT) நிறுவனர் மற்றும் வேந்தர் திரு கோ. விசுவநாதன், பழம்பெரும் நடிகர் திரு YG மஹேந்திரன், இயக்குநர் மற்றும் நடிகர் திரு தமிழ், ஜோதி முருகன் விசா சேவை மையத்தின் உரிமையாளர் திரு C. K. சுதந்திரம் ஆகியோர் ஆவர்.

இந்நிகழ்ச்சியில், விழாவுக்கான பதிவினை திருமதி ஶ்ரீ ரங்கநாயகி,முனைவர் ராஜி அச்சுதன், பொறியாளர் இரா. சுவாமிராஜன் , முனைவர் இராஜா மணிகண்டன் ஆகியோர் மேற்கொண்டனர். பெரியவர்களுக்கான கலைநிகழ்ச்சிகளை செல்வி பிரியா, திரு விபின் முத்துசாமி ஆகியோர் வழிநடத்தினர். சிறார்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு முனைவர் பூங்கவிதை வடிவு, திருமதி விஜயலட்சுமி பத்மநாபன், திருமதி பூ. சுசித்ரா, திருமதி சுமித்ரா, திருமதி அபர்ணா, திருமதி வைஷ்ணவி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு ஒழுங்குபடுத்தும் பணியைச் செவ்வனே செய்தனர். உணவு மற்றும் பயண ஏற்பாட்டினை முனைவர் பீட்டர் ஜெரோம், திரு ஆறுமுகம் பாரதி ஆகியோர் மேற்கொண்டனர்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக பிரியதர்ஷினி ஆனந்த்குமார், விபின் ஜியோ ஆகியோர் செயல்பட்டனர். பின்னனி இசைப்பதிவு, புகைப்படம், மற்றும் காணொளி வெளியிடுதலுக்கு திரு மைக்கேல் இம்மானுவேல் மற்றும் பொறியாளர் ஆனந்த் உதவிபுரிந்தனர். நிகழ்ச்சியின் பொது மேலாண்மையை முனைவர் செல்வ சர்மா, முனைவர் மகேந்திர பிரபு, முனைவர் மருது பாண்டி, முனைவர் வெங்கடேஷ், திரு ரூகேஷ், திரு ஜெகன் ஆகியோர் செய்தனர்.

May be an image of 1 person, temple, dais and text that says "கொரிய தமிழ்ச் சங்கம் கொரிய தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் கூடுதல் தைப்பொங்கல் விழா- விழா-2025 2025 ATS சாமடயம் CUL ULTURAL ES TEAM သင်လင်ရိုင်သာံစရန် a 山 23- பிப்ரவரி- 2025 சியோல் தேசிய பல்கலைக கழகம், தென்கொரியா"

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button