முன்னாள் பிரபல அமைச்சரின் வர்த்தக மையக் கூட்டத்தில் பெரும் சூழ்ச்சிக்குத் திட்டமா?; பிள்ளையானின் சகாவும் வருகை

தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையமொன்றில் கூட்டமொன்று நடந்துள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் ஏதேனும் சூழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டதா? என்ற சந்தேகங்கள் நிலவுவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் எம்.பி மேலும் கூறுகையில்,
தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் கடந்த அரசாங்கத்தில் இருந்த பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையம் ஒன்றில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில் பார்த்தால் அது பிரச்சினைக்குரியதே.
இந்தக் கூட்டத்தில் இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த சூளா கொடிதுவக்கு, கொழும்பு குற்றவியல் பிரிவில் இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நெவில் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கு பிள்ளையானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வராமையினால் அவரின் சகா இனிய பாரதியை அனுப்பியுள்ளார். இனிய பாரதி ஹில்டன் ஹோட்டலில் இருந்துள்ளார். அவரின் வாகனத்தை சுதா என்பவர் செலுத்தியுள்ளார். இங்கு என்ன சூழ்ச்சி செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பில் உங்களுக்கு எதுவும் தெரியுமா? இனிய பாரதி என்பவர் கடந்த காலங்களில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர். பிள்ளையான் தொடர்பிலும் பல தகவல்கள் உள்ளன.
நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறுகின்றீர்கள். ஆனால் கணேமுல்ல சஞ்சீவவை கொன்ற பெண்ணை இன்னும் தேடுகின்றீர்கள். நாட்டின் பொலிஸ்மா அதிபரையும் தேட முடியவில்லை. உங்களுக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்றார்.
![]()