முச்சந்தி

இந்திய மீனவர்களைத் தடுக்கத் தவறினால் வடக்கு மீனவர்கள் வீதியில் இறங்குவர்

இலங்கைக் கடற்பரப்பினைப் பாதுகாக்கவேண்டியது இலங்கைக் கடற்படையின் பொறுப்பு . ஆனால் இலங்கைக் கடற்படையினர் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர். மீனவர் சமூகத்தை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கையிலுள்ள சட்டவிரோதிகளையும், எல்லைதாண்டிவந்து எமது கடல்வளங்களை அழிக்கும் அயல்நாட்டு சட்டவிரோதிகளையும் தண்டிக்க வேண்டும் இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் மீனவமக்கள் வீதியில் இறங்குவார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயல்களினால் எமது வடக்கு மீனவர்கள் தொழில் செய்யமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எமது மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றது. வடக்கு மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்படுகின்றது.

இந்திய விசைப்படகுகள் மீன்பிடியில், மிகவும் அழிவுகரமான முறைகளிலொன்றாகக் கருதப்படும் அடித்தள இழுவை வலை பிரயோகத்தை மேற்கொள்கின்றன. ஆழ்விசைப்படகுகள் “கடலின் ஹூவர்ஸ் என்றும், புல்டோசர்கள் போன்று மீன் மற்றும் பிறஅடித்தள மீன் இனங்களை அழித்தொழிக்கின்றன.இது தொடர்ந்தால் விரைவில் எந்தமீனும் கடலில் பிடிக்க இயலாதநிலை ஏற்படும்.

பெரும்பாலான எல்லைக் கடப்புகள் வேண்டுமென்றே இலங்கைக்கடல் எல்லைகளுக்குள் ஆழமாகப் பயணிப்பதை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் மீன்பிடிப் படகுகள் இலங்கைப்பகுதியில் மட்டுமே நல்ல மீன்பிடி மைதானங்களை காண்கின்றன. எனவே அவற்றின் பெரும்பாலான மீன்பிடித்தல் அந்தப்பக்கத்தால் இடம்பெறுகின்றதென்பது வெளிப்படையான ரகசியமும், உண்மையுமாகும்.

இலங்கைக் கடற்பரப்பில் பிரதானமாக இறால் பெறப்படுவதால், பெரும்பாலான விசைப்படகுகள் பெலாஜிக் அல்லது விரிகடலுக்குரிய இழுவை வலைகளுடன் ஜோடியாக இழுவைசெய்யும் இந்திய விசைப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பை அடைகின்றன. ஒன்றை விட்ட ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட 500 இழுவைப் படகுகள் இலங்கைக்கடற்பரப்புக்குள் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

பல பாதுகாவலர்களும், சர்வதேச விஞ்ஞானிகளும் இழுவை வலைகள் கண்மூடித்தனமாக அனைத்து கடல் வளங்களையும் அழிப்பதால் அவற்றை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் இலங்கை கடற்பரப்பில் அடித்தள இழுவைப் படகுகளை இயக்கத்தடை விதித்தது.

இலங்கையின் வடக்குப்பகுதியில் ஐந்து மாவட்டங்களில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய நான்கு மாவட்டங்களில் மீன்பிடியாளர்கள் தமது முழுமையான வாழ்வாதாரமாக மீன்பிடியையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில் மிகவும் கொடூரமானமுறையில் சட்டவிரோதத் தொழில்கள் செய்து, இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டதாக அறியத்தந்திருக்கும் தொழில்களைக் கொள்ளையர்களைப்போல செய்துகொண்டிருக்கும், திருட்டுக்கும்பலை பிடிக்காமல் சட்டத்தின்முன் நிறுத்தாமல் இருக்க காரணம்தான் என்ன?

எமது மீனவர்களை வாழவிடுங்கள். என்று தான் கேட்கின்றோம்.

எமது மக்களை மேலும், மேலும் காயப்படுத்தாமல் கடற்படை, பொலிஸார், கடற்றொழில் திணைக்களப்பணியாளர்கள் தங்களுடைய கடமைகளைச் சீராகச் செய்தால் நிலைமைகள் சீராகும்

மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடும். சட்டங்களை உருவாக்கி வைத்துக்கொண்டு, அதனை முழுமையாக செயற்படுத்தாமல் எமது மீனவமக்களின் வாழ்வை அழித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.

இந்தியஇழுவைப்படகுகள் தமது எல்லைகளைத்தாண்டி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைகின்ற விவகாரத்தில் இந்திய அரசாங்கம், இந்திய கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினரும் பிழையான விதத்தில் செயற்படுகின்றார்கள்.இந்திய கடல்எல்லைரைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும்.

அதேபோல் இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர்.

இலங்கைக் கடற்பரப்பினைப் பாதுகாக்கவேண்டியது இலங்கைக் கடற்படையின் பொறுப்பு . இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் மீனவமக்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button