அநுரவின் அரசாங்கம் நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே

தற்போதைய அரசாங்கம் நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானதே என்று தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று எவராவது கூறுவராக இருந்தால் கோதாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு என்ன நடந்தது என்பதனை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவிக்கையில்,
அனுரகுமார திஸாநாயக்க மிகவும் திறமையான ஜனாதிபதியாவார். 3 வீதமாக இருந்த வாக்குகளை அதிகரித்து தமது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளமையினால் அவர் திறமையானவரே. இப்போது கன்னி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மக்களின் ஆதரவு கிடைக்கும். இல்லாவிட்டால் மக்களின் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையாக 2200 பில்லியன் ரூபா உள்ளது. எதிர்பார்க்கும் செலவுக்கு திறைசேறியின் ஊடாக நிதியை தேட முடியுமா? இதில் சவால்கள் உள்ளன. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கலால்வரி, இறைவரி திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் ஊடாக வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இவற்றின் ஊடாக வருமானத்தை அதிகரிக்க முடியாது போனால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
வழங்கிய வாக்குறுதிகளில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. எரிபொருள் வரிகளை குறைப்பதாக கூறினர். அது செய்யப்பட்டதா? மின் கட்டணத்தை மூன்றில் இரண்டால் குறைப்பதாக கூறினர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. தற்போதைய நிலைமையில் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அத்துடன் அஸ்வெசும குடும்பத்தினருக்கு 15 ரூபா வரையில் வழங்குவதாக கூறினர். அதுவும் நடக்கவில்லை. இளைஞர்களுக்காக 10 மில்லியன் கடன் வழங்குவதாக கூறினர். அதுவும் நடக்கவில்லை. இந்த வாக்குறுதிகளையும் வரவு செலவுத் திட்டத்தில் கூறிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால் மக்கள் ஆதரவுடன் முன்னால் போகலாம். இல்லையென்றால் மக்கள் எதிர்ப்புக்கு உள்ளாகலாம்.
இதேவேளை நாங்கள் 20 வருடங்களுக்கு அரசாங்கத்தை வழங்கவோ, அரசாங்கத்தை அசைக்கவோ இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்கத்தில் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறி தவறிய இடங்கள் உள்ளன. கோதாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த போதும் நாங்கள் இப்படிதான் கூறினோம். அவ்வாறு கூறிதான் கவிழ்ந்தோம். இந்த அரசாங்கம் நிரந்தரமானது என்று எவரும் நினைக்கக் கூடாது. இது தற்காலிகமானது. உரிமையாளராக அன்றி பொறுப்பாளராக இருங்கள் என்று அரசாங்கத்தில் உள்ளவர்களை கேட்டுக்கொள்கின்றேன். தற்போது உலகில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வயிற்றுக்கு அடித்தால் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மக்கள் போராடும் நிலைமை உருவாகும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
![]()