முச்சந்தி

ஜேர்மனியில் வலதுசாரிகளின் எழுச்சி!…  அகதிகள் விரோத AfD கட்சி வெற்றி!!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஜேர்மனியில் நடந்து முடிந்த 2025 தேர்தல் முடிவுகளில் இருந்து வலதுசாரிகளின் ஆதரவு பாரியளவு அதிகரித்ததை காணக்கூடியதாக உள்ளது. போருக்குப் பிந்தைய ஜேர்மன் வரலாற்றில் இது ஒரு திருப்பு முனையாகும்.

இந்த தேர்தலுக்குப் பிறகு, வலதுசாரி AfD கட்சியும், கூட்டணி ஆட்சி அமைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய ஜெர்மனியின் என்பது ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாக வலதுசாரிகள் மிகப்பெரும் சாதனை வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக ஜெர்மனியில் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் உருவாக்கிய கட்சிகள், எப்போதும் மைய-இடது அல்லது மைய-வலதுசாரியாகவே இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜேர்மனியின் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அமெரிக்க ஆதரவு குறைவடையும் நிலையில் தற்போது ஜேர்மன் சேன்சலர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட அரசியல்வாதியே வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஜேர்மனியின் வலதுசாரி அரசியல் எழுச்சியை மீண்டும் இந்த தேர்தலில் காணக் கூடியதாக உள்ளது. அத்துடன், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியும் (AfD )எதிர்பார்த்தது போலவே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2025 ஜேர்மன் தேர்தல் முடிவுகள்:

நடந்து முடிந்த தேர்தலில் ஜேர்மன் சேன்சலர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரெட்ரிக் மெர்ஸின் CDU/ CSU கட்சி, 208 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அக்கட்சி 28.6 சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளது.

பல மனித உரிமை அமைப்புகள் உற்று நோக்கிய புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சியான AfD 151 ஆசனங்கள் பெற்றுள்ளது. அக்கட்சி 20.8சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளது.

தற்போது ஆட்சியில் இருந்த ஜேர்மன் சேன்ஸரான ஓலாஃப் ஷோல்ஸின் SPD கட்சிக்கு 121 ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அக்கட்சி 16.4 சதவிகித ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது.

இதேவேளை ஆட்சியில் இடம்பெற்ற பசுமை கட்சிக்கு 85 ஆசனங்களும், The Left (Die Linke) கட்சிக்கு 64 ஆசனங்களும் , BSW கட்சிக்கு 5 ஆசனங்களும் கிடைத்துள்ளன.

பிரெட்ரிக் மெர்ஸ் ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலராக பதவியேற்க இருக்கும் நிலையில், FDP கட்சி 5 சதவிகித வாக்குகளைக் கூட பெறாததால், அக்கட்சியின் தலைவரான Christian Lindner தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

டிரம்ப்பின் வலதுசாரித்துவ விளைவா?

ஜேர்மனியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய வலதுசாரித்துவ விளைவா அல்லது முழு உலகமும் வலதுசாரி பக்கம் திரும்புகிறதா என்று ஐயமுற வேண்டியுள்ளது.

குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரியாவிலும் வலதுசாரி அரசியல் கட்சிகள் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

முக்கியமாக இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் பொருளாதார கவலைகள், கலாச்சார பதட்டம் மற்றும் பாரம்பரிய நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை இழப்பும் காரணமாகும். இதன் விளைவாகவே தற்போது வலதுசாரி அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

அத்துடன் 35 ஆண்டுகால உலகமயமாக்கல் – மூலதனம், பொருட்கள், யோசனைகள், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களின் சுதந்திரமான இயக்கம் – உலகம் முழுவதும் பல வெற்றியாளர்களை உருவாக்கியது என்பது உறுதி, ஆனால் அது தோல்வியுற்றவர்களையும் உருவாக்கியதை அவதானிக்கலாம்.

தோல்வியுற்றவர்கள் முக்கியமாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் ஆவார்கள். இந்த நாடுகளில் உள்ள முக்கிய கட்சிகள் இந்த தொழிலாள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் அக்கறை கொள்ள முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, மேற்குலக மக்கள் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் நியாயமான முறையில் கோபப்படுவதனை எவராலும் தவிர்க்க முடியாது என்பது உண்மையாகும்.

ஜேர்மனியின் புதிய சேன்சலர் :

தற்போது பாரிய வெற்றி பெற்ற 69 வயதான திரு மெர்சின் தலைமையின்கீழ் செயல்பட இருக்கும் கூட்டணியில் வலதுசாரி கட்சியான ஏஎஃப்டியும் இடம்பெற உள்ளது.
அக்கட்சி தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஏஎஃப்டி கட்சியுடன் திரு மெர்ஸ் நீண்ட, சவால்மிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், ஐரோப்பாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்க செயல்பட இருப்பதாகத் திரு மெர்ஸ் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மனிதான் ஆகப் பெரிய பொருளியலைக் கொண்டுள்ளது.
தற்போது அந்நாட்டின் பொருளியல் பலவீனமாக உள்ளது.

ஜெர்மனியின் பொருளியலை மேம்படுத்தும் பொறுப்பு முதல்முறையாகப் ப பதவி வகிக்க இருக்கும் திரு மெர்சுக்கு உள்ளது. மேலும், குடியேறிகள் தொடர்பாகவும் ஜெர்மானியர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

குடியேறிகள் தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த பலரிடமிருந்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டிய அவசியம் திரு மெர்சுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கும் இடையே ஐரோப்பிய நாடுகள் சிக்கித் தவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையையும் திரு மெர்ஸ் சமாளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

AfD கட்சியின் வளர்ச்சி:

ஜேர்மனியில் AfD கட்சியின் வளர்ச்சி ஒரு தற்செயலானதல்ல. மாறாக பல தசாப்த கால கடும் போக்கு கொள்கைகளின் விளைபொருளாகும். 30 ஆண்டுகளுக்கு பின்னர், கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவத்தின் மீட்சி முழுப் பிராந்தியங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தி, பாரிய வேலையின்மையையும் சமூக அவலங்களையும் தோற்றுவித்துள்ளது.

கிழக்கு ஜேர்மனி பொருளாதாரத்தின் சீரழிவு, அதனால் விளைந்த வறுமை மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்பின்மை ஆகியவை வலதுசாரிகளுக்கு ஒரு விளைநிலத்தை உருவாக்கின.

சமீபத்திய ஆண்டுகளில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் AfD இன் அகதிகள்-விரோத கொள்கையை ஏற்பது உட்பட அதை அங்கீகரிப்பதற்கும் உதவியுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button