கட்டுரைகள்

திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்களே!…  திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களே!

தங்கள் இருவரையும் நினைத்தால் தங்களுடைய அரசியல் என்பது என்ன என்று யோசிக்க வேண்டியுள்ளது.

காங்கேசன்துறை,குரு வீதியிலுள்ள தையிட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்ட புத்த விகாரையை இடிப்போம் என திரு.செல்வம் அடைக்கலநாதன் சூளுரைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.இப்படியெல்லாம் பேசினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமே என்பது அவருக்குத் தெரியும்.

இந்த அரசாங்கம் தொடர்ந்து நியாயமான நகர்வுகளைச் செய்து வருவதை அவதானித்த திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு காலப்போக்கில் தாங்கள் எதை வைத்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பதில் எதுவுமே இல்லாமல் போய்விடுமே தாங்களும் தொடர்ந்து நாடாளுமன்றம் போக முடியாமல் போய்விடும் என்பதற்காக இப்பொழுது விகாரையை இடிக்கும் சங்கே முழங்கு விவகாரத்தை கையிலடுத்திருக்கிறார்.

விகாரை அந்த இடத்தில் கட்டப்பட்டதற்கு மெத்தச் சரியான காரணம் உண்டு.அங்கு முன்பே ஒரு விகாரை இருந்தது உண்மையே.அது எனக்கும் தெரியும் பலருக்கும் தெரியும்.
இன்னும் சொல்லப் போனால் மகாஜனக் கல்லூரியின் அதிபராக இருந்த திரு.பொ.கனகசபாதி அவர்களுக்கும் விகாரை இருப்பது தெரியும்.

அவர் இந்த விகாரை அமைந்துள்ள குரு வீதியில் உள்ள வீட்டில்தான் திருமணம் செய்தவர்.அதிபர் சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்.அவரின் மைத்துனரும் எழுத்தாளருமான கனடாவில் வசித்து வரும் திரு.குரு.அரவிந்தனுக்கும் விகாரை இருப்பது தெரியம்.
காங்கேசன்துறை தையிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏதாவது கதை வரும் போது அந்த விகாரையடி என்று சொல்லிக் கதைப்பதை நானும் கேட்டிருக்கிறேன்.

இது இப்படியிருக்க விகாரை இருந்த வரலாறு தெரியாத திரு.செல்வம் அடைக்கலநாதன் தமிழர்களைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் விடிஞ்சால் பொழுதுபட்டால் அதைப்பற்றியே கதைக்க வேண்டும் தானிருப்பதையும் தமிழ் மக்கள் மறக்கக் கூடாது என்பதற்காக விகாரையை இடிப்போம் என பூமிக்கும் வானத்துக்கும் இடையில் குதித்துக் கொண்டிருக்கிறார்.

இது தேவையற்ற கொக்கரிப்பும் சூளுரைத்தலுமாகும். இவர் இப்படிச் சொல்ல முன்னாள் அரசின் அமைச்சர் திரு.உதய கம்மன்பில தமிழர் விகாரையில் கைவைச்சுப் பார்கஇகட்டும் என்று அவரின் பங்குக்கு அவரும் சவால் விட்டுள்ளார்.

எந்த வணக்கதலங்களையும் இடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என ஆளும் அரசு சொல்லியிருக்கின்றது.

மெல்ல மெல்ல அணைந்து கொண்டிருக்கும் இனவாத நெருப்பை அணையவிடாமல் இருப்பதற்கு திரு. செல்வம் அடைக்கலநாதன் அவர்க இனவாதக் கருத்தைப் பரப்புகின்றார் என்பதே உண்மை.

சிங்கள அரசியல்வாதிகள் ஆறஅமர பேசாமலிருந்தாலும் திரு.செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் சும்மா இருக்க விட மாட்டார்கள் என்றே தோன்றுகின்றது.

கட்டிய விகாரையை உடைப்போம் என்பது மதவெறி இனவெறி சார்ந்தது,வன்முறையானது.
இது போலத்தான் முன்னாள் ஜனாதிபதி திரு.மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது அவரைச் சந்தித்த தமிழறிஞர் ஆன்மீகவாதி திரு.மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் ஜனாதிபதியிடம் இந்தியாவில் பாபர் மசூதிக்கு நேர்ந்த கதிதான் தையிட்டி விகாரைக்கும் நேரும் எனச் சொல்லியிருந்தார்.

அதற்கு நான் தையிட்டியில்: ஒரு புத்த விகாரை இருந்தது தங்களுக்குத் தெரியாதா?.தாங்கள் ஒரு தமிழறிஞர் இலங்கைத் தமிழர் வரலாறு தெரிந்தவர் பாபர் மசூதிக்கு நடந்த கதிதான் தையிட்டி விகாரைக்கும் நடக்கும் எனச் சொன்னதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் வெறுப்புக்கும் ஆளாகியுள்ளீர்கள் என்று அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் எழுதிய போது தையிட்டியில் விகாரை இருந்தது உண்மைதான் அது தனக்கும் தெரியம்,ஆனால் அதை விரிவாக்கம் செய்ததூன் கோபம் என்று பதில் எழுதியிருந்தார்.

தமிழறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் பற்றியும் அவரின் தமிழர் வரலாறு அறிவு பற்றியும் ஏற்கனவே, வீரகேசரி,தினக்குரல் பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் எனது அயலவருமான திரு.ஆ.சிவநேசச்செல்வன் அவர்களும் அவரின் தந்தையாரான பண்டிதரும் ஆசிரியருமான திரு.நா.ஆறுமுகம் அவர்களும் எனக்குச் சொல்லியிருந்தார்.

இப்பொழுது விகாரைக்காக மேலதிகமாக எடுத்த காணிக்குப் பதிலாக அரசாங்கம் காணி உரிமையாளர்களுக்கு காணி தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது.

அதைத் தமிழர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் பிரச்சினை தீரக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

சிங்களவர் தமிழருக்கிடையில் இனவாத மதவாதக் கருத்துக்களைத் தமிழ் அரசியல்வாதிகள்; பேசி இணமுரண்பாடுகளை வளர்க்காமல் இருப்பதே தமிழர்களுக்கு நல்லது.

இது ஒரு புறமிருக்க, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலிருந்த இடத்தில் முன்பு பெரிய ஆலமரத்தடி விகாரையிருந்தது என்றும் அது இடிக்கப்பட்டுத்தான் கோவில் கட்டப்பட்டது என்றும் வணக்கத்துக்குரிய சுவாமி ஞானப்பிரகாசசுவாமிகள் சொன்னதாக பேராயர் ஜெபநேசன் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஞானம் சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.இதையும் சிங்கள வரலாற்றாய்வாளர்கள் துருவித் துருவி ஆராய்ந்தார்களானால்?

இலங்கைத் தமிழர் வரலாற்றில் கலப்பின நிலை உண்டென்பதை மறுக்க முடியாது.சோழரின் படையெடுப்பை எதிர்த்த கொவிகமப் பிரிவினர் பலரை சோழப்படைகள் கைது செய்து தமிழர் பதிகளில் குடியேற்றியமையும் அவர்கள் இப்பொழுது தமிழர்களாக அதே பெயரில் நெடில் உச்சரிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்கள் வழிபட்ட விகாரைகள் புத்த சின்னங்கள் தையிட்டி,தொல்புரம் சுளிபுரம்,சுண்ணாகம் போன்ற இடத்திலிருக்கின்றன என்ற உண்மையும் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கின்றது,இது போன்ற வரலாற்று உண்மைகளை தமிழ்வரலாற்று ஆய்வாளர்களும் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

அந்த மூடிமறைப்புக்கு உட்பட்டதுதான் தையிட்டி விகாரையும்.எனவே உண்மைகளை ஒப்புக் கொள்வதே தமிழர்களும் தமிழரசியல்வாதிகளினதும் தார்மீகமான கடமையாகும்.
இது இப்படி இருக்க விகாரைக்கெதிரான போராட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளப் போவதாக திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறியது பெரும் வியப்பாக இருக்கின்றது.
ஏனென்றால் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக அங்கம் வகித்த அரசு காலத்திலேயே இந்த விகாரை கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்படிக் கட்டுவது பிழையென்றால் அப்பொழுதே தான் அங்கம் வகித்த அரசுக்கு இடித்துரைத்திருக்கலாம்,அதை அவர் அப்பொழுது செய்யவில்லை. இப்பொழுது இந்த அரசில் அங்கம் வகிக்கவில்லையென்பதால் விகாரைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்.
இலங்கை அரசின் இணக்கப்பாட்டில்தான் தமிழர்களின் உரிமையைப் பெறமுடியும் என்று சொன்னவர் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

தமிழரசியல்வாதிகள் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று சொன்னவரும் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களே. தமிழரசியல்வாதிகள் அரசுடன் ஒத்தழைப்பதே சிறந்த வழி.தமிழரசியல்வாதிகளிடம் காணப்படும் குறைபாடு என்னவென்றால் எந்த ஒரு விடயத்திலும் முதலில் சோடா காஸ் மாதிரிப் பொங்கி வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது,அதைப் பார்க்கிற தமிழ் மக்களம் புளகாங்கிதம் அடைவது,பிறகு அரசியல்வாதிகள் அடங்கிப் போய்விடுவார்கள்.சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ்மக்ளைப் பற்றி நன்றாகவே படித்துவிட்டார்கள்.

தையிட்டி விகாரை விடயத்தில் புத்த விகாரை முன்பே இருந்ததை ஒப்புக் கொண்டு கொவிகமப் பிரிவினர் தமிழர்களாக மாறியதை ஒப்பக் கொண்டு விகாரை விஸ்தரிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்கு நட்:ட ஈடு தாருங்கள் அல்லது வேறு காணி தாருங்கள் எனக் கேட்கும் புத்திசாலித்தனம் தமிழர்களிடம் இல்லவே இல்லை.

ஜனாதிபதி திரு.அநுரகுமார திசநாயக்காவின் வெற்றியைச் சகிக்க முடியாமல் இருக்கும் சிங்கள இனவாதிகளின் கொம்பைச் சீவிவிடும் வேலையைத்தான் திரு.அடைக்கலம் சிவநாதனின் செயல் உணர்த்தகின்றது.

சிங்கள மதவாh இனவாத அரசியல்வாதிகளுக்கு தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றதும் நாளுக்கு நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவுக்கு தமிழர் பகுதிகளில் ஆதரவு பெருகி வருவதை பொறுக்க முடியாமல் இனவாதக் கருத்துக்களை கொழுத்திப் போடுவோம் என்றிருப்பவர்களுக்கு அதை இடிக்கிறோம் இதை இதை இடிக்கிறோம் என்பது சாதகமான நிலையை ஏற்படுத்தும்.

சிங்கள வரலாற்றாய்வாளர்கள் தமிழர் பகுதிகளில் வாழும் குறிப்பிட்ட இனப்பிரிவினர் எமது வேர்களே,எமது மரபணுக்களே என்று சொல்லத் தொடங்கினால்?

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *