முச்சந்தி
உக்ரைன் – ரஷ்ய போர்க் களத்தில் கொல்லப்படும் சிறிலங்கா வீரர்கள்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

அண்மையில் ரஷ்ய – உக்ரைன் மோதல்களில் இலங்கையின் பல முன்னாள் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா அரசு உறுதிப்படுத்தியுள்ளது.தனியார் ராணுவ கூலிப்படைகளுக்கு வன்முறைகள் ஒரு பொருட்டே இல்லை. கொடூரங்களை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு மீதம் இருக்காது. அதிக கூலி, அதிக கொடுமைகள் என்ற கோட்பாட்டில்தான் இந்த தனியார் ராணுவப்படைகள் செயல்படுகின்றன.
உக்ரைன் – ரஷ்யாவில் கூலிப்படை:
உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப்படையாக இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் தெரிவித்தார்.
உக்ரேனிய போரில் சிறிலங்காவின் பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கடந்த ஆண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன. கடந்த சில ஆண்டுகளில் பல இலங்கையர்கள் உக்ரைனிய ராணுவத்தில் கூலிப்படைகளாக இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தில் கடந்த சில ஆண்டுகளில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் உக்ரேனிய எல்லையிலுள்ள போர்க்களங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்ய போர்களங்களிற்கு இலங்கையில் ஆட்களை சேர்ப்பது கடந்த வருடத்தில் தீவிரமடைந்தது. இதே வேளை கியுபா போன்ற இலத்தீன் நாடுகளில் இருந்தும் பெருமளவு கூலிப்படையினர் ரஷ்யாவில் காணப்படுகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – நேபாள கூலிப்படைகள்:
உக்ரைனில் தனியார் ராணுவ கூலிப்படையில் சேர்வதற்கு உலகம் முழுவதும் இருந்து பலர்
ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. குறிப்பாக இந்தியா, நேபாள நாட்டிலிருந்து ஏராளமான இளைஞர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், இத்தகைய தன்னார்வ இராணுவ குழுவில் சேர்கிறார்கள் என்று ஓர் செய்தி வெளிவந்தது.
ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. குறிப்பாக இந்தியா, நேபாள நாட்டிலிருந்து ஏராளமான இளைஞர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், இத்தகைய தன்னார்வ இராணுவ குழுவில் சேர்கிறார்கள் என்று ஓர் செய்தி வெளிவந்தது.அவ்வாறு சேரக்கூடிய வீரர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகு அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என்ற சலுகை இருப்பதாகவும் அதனால், மேலும் பலர் சேருகிறார்கள் என்றும் தெரிகிறது.
நேபாள அரசு இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம், நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற வகையில் கையை விரித்துக் கொண்டார்கள்.
இந்திய அரசு, நேபாள வீரர்களை ராணுவத்தில் எடுப்பதை நிறுத்திவிட்டது மட்டுமல்ல, அக்னி பாத் என்ற பெயரால் நிரந்தர ராணுவ பணியை ஒழித்துக் கட்டியதும் இதற்கு முக்கிய காரணம் என்றும் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் இதுபோன்ற அண்டை நாடுகளில் இணைவது இந்தியாவுக்கு ஆபத்து என்று தெரிவித்துள்ளது.
ரஷ்ய வாக்னர் கூலிப் படைகள்:
முன்பு ரஷ்யாவில் இயங்கிய தனியார் ராணுவப் கூலிப்படையான வாக்னர் குழுவும் (Wagner Group), உக்ரைன் யுத்தத்தில் தீவிரமாக களமாடியது. ஆனால் 2023 ஜூனில் தளபதி எவ்கேனி பிரிகோஷின் யுத்த களத்தில் இருக்கும் போது ரஷ்ய இராணுவ தலைமைக்கு எதிராக கலகத்தை ஆரம்பித்தார்.
ஆயினும் 24 மணி நேரத்தில் அவர் அறிவித்த கலகம் முடிவுக்கு வந்தது.
வாக்னர் குழுவின் கலகத்தை ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் மக்களுக்கு எதிரான தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டி, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும், மரண தண்டனை உட்பட சட்ட ரீதியான அனைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
உடனடியாக பிரிகோஷின் தனது கலகத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். யுத்த காலத்தில் இது ஒரு மோதலாக மாற வேண்டாம், அப்படிப்பட்ட மோதல் உக்ரைன் யுத்தத்திற்கு ரஷ்யாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பின்புலத்தில் அவர் மீதான சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைய அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் டூலா (Tula) நகர விமான விபத்தில் கொல்லப்பட்டார். இந்த கலகத்தை அடுத்து விளாடிமிர் புடின் ரஷ்ய ராணுவத்தை ஒன்றுபடுத்தி இருப்பதுடன், மக்களின் ஆதரவையும் அதிகப்படுத்தி இருப்பதாக கள நிலவர தகவல்கள் தெரிவித்தன.ஆட்கடத்தலில் இராணுவ அதிகாரிகள்:
ரஷ்ய உக்ரைன் போரில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் பலர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது.
தற்போது இலங்கை இராணுவத்தில் பொது மன்னிப்புக்காக சுமார் 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 357 ஆக காணப்பட்டது. அத்துடன் சட்டவிரோதமான முறையில் சேவையிலிருந்து விலகி மீண்டும் பணிக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை 799 என அறிவிக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி அங்கவீனமடைந்த அல்லது யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு 55 வயது வரையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் பல முன்னாள் இராணுவ வீரர்கள் கூலிப்படையாக அனுப்பப்படுவதற்கு, அரசின் உயர் அதிகாரிகளும் பொறுப்பு என்றே கூறப்படுகிறது.

இதேவேளை 2020 ஆம் ஆண்டு மட்டும் தனியார் ராணுவ கூலி படைகளுக்கான
அமெரிக்காவின் முதலீடு 224 பில்லியன் டாலர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. ஆனால் 2030 ஆம் ஆண்டு இது 457 பில்லியன் டாலர் அளவிற்கு உயரம் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.
அனேகமாக ஒரு நாட்டின் ராணுவத்திற்கு சமமாக தனியார் ராணுவ கூலிப்படைகளும் இன்றைய தினம் உருவாகிவிட்டது அல்லது உருவாக்கப்பட்டுள்ளது என்றே கருத வேண்டியிருக்கிறது.
![]()