வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வுக்கு விசேட திட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில்நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கலிபோர்னியா பல்கலையின் ஓய்வு நிலை பேராசிரியரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளருமான காசி விஸ்வநாதன் செல்வகுமார் மற்றும் கனடா – இலங்கைக்கான வர்த்தக சபையின் இணைப்பாளர் குலா செல்லத்துரை ஆகியோர் இணைந்து யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில் –
யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் centre for prosthetics (cfp) மற்றும் இந்தியாவின் spark minda நிறுவனம் இணைந்து மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை வலுப்படுத்தும் திட்டமாக இது முன்னெடுக்கப்பகின்றது.
யாழ் பல்கலை பொறியியல் பீடத்தின் தொழில் நுட்ப அனுசரணையூடாக கனேடிய அரசு மற்றும் கனேடிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் நிதிப் பங்களிப்பில் இந்த மறுவாழ்வு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வரப்பிரசாதத்தை அவயவங்களை இழந்து நாளாந்தம் பல்வேறு அவமானங்களையும் அசௌகரியங்களையும் கண்டுவருவோர் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த முப்பரிமாண பொறிமுறையூடான அவயவங்களை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பாக பயிற்சிப் பட்டறை ஒன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம்
5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிள்ளது.
இதில் பங்கேற்க இலங்கையில் இருந்து 50 பேரை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம்.இதேநேரம் இந்த அவயவங்கள் முப்பரிமாண பொறிமுறையூடாக தயாரிக்கப்படுகின்றது.
ஆனாலும் இந்த தொழில் நுட்பம் இலங்கையில் இன்மையால் அதை இந்தியாவில் இருந்து முதற் கட்டமாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இதை யாழ் பல்கலை பொறியியல் பீடம் முழுமையாக மேற்கொள்ளும்.
இதே நேரம் இந்த திட்டமானது யுத்தத்தில் பாதிக்கப்படு அவயவங்களை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய விபத்து மற்றும் நோய்களால் அவயவங்களை இழந்தவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவயவங்களை இழந்தவர்களுக்கு அவர்களது சுய மரியாதையை மீண்டும் உருவாக்கல் மற்றும் அவர்களின் பொருளாதார ஈட்டலுக்கான வழியை உருவாக்கல் ஆகியவற்றை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான அவயவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் 0742287850 என்னும் இலக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி பயன் பெற்றுக்கொள்ளுமாறும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()