முச்சந்தி

சிறிலங்காவின் சுதந்திர தினம்; தமிழர்களுக்கு கருப்பு நாள் !

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC) ஊடக அறிக்கை:

04 பெப்ரவரி 2025 சிறிலங்காவின் 77வது சுதந்திர தினம், தமிழர் தாயகத்தில் கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சிறிலங்காவின் 77வது சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டிப்பதில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC) தாயகத்திலும், உலகளாவிய புலம்பெயர்ந்தோரிலும் உள்ள தமிழர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது.

தமிழர்களுக்கு, பெப்ரவரி 04 என்பது கொண்டாட்ட நாளல்ல. மாறாக பல தசாப்தங்களாக ஒடுக்குமுறை, அரசால் ஆதரிக்கப்படும் வன்முறை மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்காவின் இனப்படுகொலைப் போரிலிருந்து உருவான தீர்க்கப்படாத அநீதிகளின் வேதனையான நினைவூட்டலாகும்.

மே 2009 இல் நடந்த இந்தப் போரின் உச்சக்கட்டமாக மிகப்பெரிய போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைக் தமிழர் தாயகம் கண்டது. ஆனால் இன்றுவரை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நம்பகமான பொறுப்புக்கூறல் எதுவும் வழங்கப்படவில்லை.

சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன பிறகும், போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆன பிறகும், சிறிலங்கா ஒரு தோல்வியடைந்த நாடாகவே உள்ளது. பொருளாதார வீழ்ச்சி நிலை, அதிக இராணுவச் செலவு, அரசியல் முன்னேற்றம் அற்று, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிலைமை போன்றவற்றால் போராடி வருகிறது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் இராணுவம் இருந்தபோதிலும், போதைப்பொருள் மற்றும் ஆயுதமேந்திய குண்டர்கள் பரவலாக கிடைப்பது போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கப்படுகின்றன.

இது ஆளும் அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது. மாற்றத்திற்கான வாக்குறுதியின் பேரில் பிரச்சாரம் செய்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், எந்த அர்த்தமுள்ள சீர்திருத்தங்களையும் வழங்கத் தவறிவிட்டது. தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை தன்னிச்சையாக தடுத்து வைக்க வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியான கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) வாக்குறுதியளிக்கப்பட்டபடி இன்னமும் ஒழிக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் உள்ளனர். நியாயமான விசாரணைகள் இல்லாமல், ஒடுக்குமுறை ஆட்சியைத் தொடர்கின்றனர்.

மேலதிகமாக வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட, அரசால் தொடரப்படும் சிங்களக் குடியேற்றங்கள் – புத்தமயமாக்கல் தொடர்கின்றன. இது தமிழர் பிராந்தியத்தின் மக்கள் தொகை சமநிலையை மாற்றவும், தமிழர்களை மேலும் ஓரங்கட்டவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டமிடப்பட்ட காலனித்துவக் கொள்கைகள் தமிழ் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்கவும், தமிழ் மக்களை அவர்களின் சொந்த தாயகத்தில் சிறுபான்மையினராக மாற்றவும் முயல்கின்றன. சிறிலங்காவில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை நிலைநிறுத்தும் நீதி மற்றும் நீடித்த அரசியல் தீர்வுகளை அடைய சர்வதேச தலையீட்டிற்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்கவும், அரசியல் தீர்வு, உண்மையான நீதியை நோக்கிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளை ஆதரிக்கவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தையும் சர்வதேச சமூகத்தையும் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC) வலியுறுத்துகிறது.

பெப்ரவரி 4, 2025 அன்று, அவுஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு
நிகழ்ச்சிகளில் ஒன்றுகூடி, நீதி, கண்ணியம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான தங்கள் கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவார்கள்.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அவுஸ்திரேலிய அரசாங்கத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் சுதந்திரம் மற்றும் நீதியுடன் கூடிய அமைதிக்கான தேடலில் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறது.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
அனைத்து தமிழர்களுக்கும் ஒருங்கிணைந்த குரலாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button