இலங்கை

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அநுரவிடம் எதுவும் இல்லை; பிரிட்டன் அமைச்சரிடம் கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டு செல்வதற்கு பிரிட்டனுடைய முயற்சி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அந்தந்த நாடுகளிலேயே இனப்படுகொலை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ,போர்க்குற்றங்கள் போன்ற விடயங்களுக்கு சந்தேகிக்கின்ற நபர்களுக்கு தங்கள் தங்கள் நீதிமன்றங்கள் வழக்கு தாக்கல் செய்து முற்படுத்த வேண்டும் என பிரிட்டனின்   இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர்

கெதரின் வெஸ்டிடம்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வலியுறுத்தியுளார்.

பிரிட்டனின்  இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர்

கெதரின் வெஸ்ட்டை யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த   அவர்  கூறுகையில்,

இந்த சந்திப்பில் குறிப்பாக இன்று இருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்தியினுடைய அரசாங்கத்தின் தமிழ் மக்கள் சார்ந்த நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தினோம்.தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பி.யினுடைய நிலைப்பாடு என்பது அவ்வாறு ஒரு பிரச்சினை இல்லை என்பதேயாகும்.அந்த வகையில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதுக்கு பிறகு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிறகும் தமிழருடைய இனப்பிரச்சினை தொடர்பாக ஆக்கபூர்வமாக எவ்விதமான செயல்பாடுகளும் அவர்களிடம் இல்லை. பாரம்பரியமாக தமிழ் மக்கள் ஆணை வழங்கியிருக்கின்ற தமிழ் தேசிய கட்சிகளோடும் இனப்பிரச்சினைகள் சம்பந்தமாக எந்த விதமான நடவடிக்கையும் ஜே.வி.பி. எடுத்ததாக இல்லை.

வடக்கு கிழக்கில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு பொறுப்பு கூறல் விடயம் என்ற விடயம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோன்று பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் பொறுப்பு கூறலை மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் கூட இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எந்த நீதிமன்றத்திற்கு முன்பாகவும் எடுத்துப் போவதில்லை என்ற விடயத்தை சுட்டிக்காட்டினோம்.

அரசியல் ரீதியாக தீர்வு கொடுப்பதற்கு மனம் இல்லாத, பொறுப்பு கூறலை முற்றிலும் நிராகரித்து செயல்படுகின்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்தால் சர்வதேச மட்டத்தில் பிரித்தானியா போன்ற நாடுகள் பொறுப்பு கூறலை இறுக்கமாக சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டு செல்வதற்கு பிரிட்டனுடைய முயற்சி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அந்தந்த நாடுகளிலேயே இனப்படுகொலை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ,போர்க்குற்றங்கள் போன்ற விடயங்களுக்கு சந்தேகிக்கின்ற நபர்களுக்கு தங்கள் தங்கள் நீதிமன்றங்கள் வழக்கு தாக்கல் செய்து முற்படுத்த வேண்டும் என்ற விடயங்களை நாங்கள் வலியுறுத்தினோம்.

பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் சர்வதேச மட்டத்தில் கணிசமான முன்னேற்றத்தை நாங்கள் அடைந்தால் கணிசமான அழுத்தம் தமிழ் விரோத தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும். தமிழ் தீவிரவாதிகள் இராணுவத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர். போர்க்காலத்திலே அதனை மிகத் தெளிவாக ஆதரித்த அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் நேரடியாக கொள்கை ரீதியாகவும் போர் நடந்த முறையில் சம்பந்தப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்ற விடயத்தை சுட்டிக்காட்டினோம்   என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.