ஈழத் தமிழர்-காஷ்மீரி பண்டிட் இன துயர் நிலை அறிய டெல்லியில் சர்வதேச மாநாடு… ஐங்கரன் விக்கினேஸ்வரா

டெல்லி பல்கலைக்கழக, நவீன இந்திய மொழித்துறையும், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC) உடன் இணைந்து ‘ஈழத் தமிழர்- காஷ்மீரி பண்டிட்களின் துயரமிகு உயிர் வாழ்வின் விவரணம்’ எனும் சர்வதேச மாநாடு நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சர்வதேச மாநாடு திங்கள் கிழமை 27 ஜனவரி 2025, கலை பீட மண்டபம், டெல்லி பல்கலைக்கழகம், புது டெல்லியில் பல்வேறு துறைசார் அறிஞர்களுடன் இணைந்து நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC) தலைவர், திரு. கிருஷ்ணபிள்ளை இளங்கோ தலைமை உரையாற்றி நிகழ்வை தொடங்கி வைப்பார். பின்னர் இம் மாநாட்டில் அமெரிக்க தமிழ் நடவடிக்கைக் குழு (USTAG) செயலாளர் திரு. கே. சுந்தர் அவர்களும் பங்கேற்று சிறப்புரை உரையாற்றுவார்.
பாலினக் கண்ணோட்டத்தில் ‘ஈழத் தமிழர்- காஷ்மீரி பண்டிட்களின் துயரமிகு உயிர் வாழ்வின் விவரணம்’ ( Meta-Narratives of Suffering and Survival: Gendered Perspectives from Sri Lankan Tamils and Kashmiri Pandits) சர்வதேச மாநாட்டினை அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC) உடன் டெல்லி பல்கலைக்கழக, நவீன இந்திய மொழித்துறை (MODERN INDIAN LANGUAGES & LITERARY STUDIES, UNIVERSITY OF DELHI IN COLLABORATION WITH AUSTRALIAN TAMIL CONGRESS) இணைந்து நடாத்த உள்ளனர்.
இந்நிகழ்வில் டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் மம்தா சர்மா, டெல்லி பல்கலை கலை பீடத்தின் தலைவர் பேராசிரியர் அமிதவா சக்ரவர்த்தி, மற்றும் பேராசிரியர் டி. உமா தேவி ஆகியோரும் பங்கேற்று உரையாற்றுவர்.
இரு வருடங்களுக்கு முன்னரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1, 2023 அன்று, ‘இலங்கைத் தமிழர் காணாமல் போதல்’ மற்றும் ‘இழந்த குரல்கள் – பகிரப்பட்ட போராட்டங்கள்’ என்ற தலைப்பிலும் சர்வதேச மாநாடு நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்கு முன்னாள் வடக்கு முதலமைச்சரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் பேராசிரியர் டி. உமா தேவி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.
இந்த நிகழ்வின் மூலம் வரலாற்றில் இரு இனங்களின் முக்கியத்துவம் பகிரப்பட்டது. இனப் பண்பாட்டு ஆர்வங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஒத்துழைப்பு எதிர்கால கல்வித்துறைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இந்த மாநாட்டின் மூலம் இரு தேசிய இனங்களின் பாலின அனுபவங்களில் ரீதியாக, மோதலின் தாக்கங்களை ஆராயவும், மோதல்களால் ஏற்பட்ட விளைவுகள்
மூலம் இந்த சமூகங்கள் தங்கள் துயரமிகு பாதைகளை எவ்வாறு செப்பனிட்டு வழிநடத்தியுள்ளன என்பதைப் பற்றி விவாதிக்கவும் அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும்
மாணவர்கள் பரவலாக அறிந்திட இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாட்டின் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் பன்முகத்தன்மை கொண்ட ஆய்வாளர்கள் ஆவார்கள். மேலும் நிபுணத்துவமும் பங்கேற்பும் இந்த முக்கியமான கலந்துரையாடலுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம் என்று டெல்லி பல்கலைக்கழக, நவீன இந்திய மொழித் துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.


![]()