முச்சந்தி

இராணுவ முகாமிலிருந்து 70 துப்பாக்கிகள் மாயம்

அடையாளம் தெரியாத இராணுவ முகாமில் இருந்து 70க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காணாமல் போனது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் காணாமல் போன ரி-56 துப்பாக்கிகளில் இரண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 47 வயதுடைய சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், வெள்ளிக்கிழமை மாத்தறை கொட்டவிலாவில் 11 தோட்டாக்களுடன் ஒரு ரி56 துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வெலிகந்த, ருஹுணுகெதவில் சந்தேக நபர் விற்க முயன்றதாகக் கூறப்படும் மற்றொரு ரி56 துப்பாக்கி மற்றும் ஒரு கையெறி குண்டு மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

விசாரணைகளில் சந்தேக நபர் வெடிமருந்துகளுடன் மேலும் ஒரு ரி56 துப்பாக்கியை 200,000 ரூபாவுக்கு விற்றதாக தெரியவந்துள்ளது. வெல்லம்பிட்டி பொலிஸாரால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ஒருவர், தன்னிடமிருந்து ஆயுதத்தை வாங்கியதாக ஒப்புக்கொண்டு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிவில் பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மேலும் விசாரிக்க கொழும்பு குற்றப்பிரிவு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றது. இராணுவ முகாம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விவரங்கள் தற்போது மறைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் காணாமல் போன துப்பாக்கிகள் மற்றும் குற்றங்களுடன் அவற்றின் சாத்தியமான தொடர்புகள் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button