பிரச்சினைகளை மூடி மறைக்க அரசு முயற்சி!

அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டிய விடயங்களை விடுத்து அவசியமற்ற விடயம் தொடர்பில் அவதானத்தை திருப்பி உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்னும் சில தினங்களில் முன்வைக்கப்படவுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் கடும் பொருளாதார பிரச்சினைகளில் இருக்கின்றனர். தமக்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு எப்படி அரசாங்கம் நன்றி கூற போகின்றது என்று நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் மக்களின் பிரச்சினைகளை சரியாக அடையாளம் காண முடியாது அரசாங்கம் இருக்கின்றது. தற்போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகளும் அதிகரித்துள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அரிசிக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும் என்று எவரும் நினைக்கவில்லை. அத்துடன் உர மானியம் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்கவும் அரசாங்கத்தால் முடியாமல் இருக்கின்றன. துறைமுக நெருக்கடிக்கு தீர்வு காணவும் முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது.
அத்துடன் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயத்தை விடுத்து அவசியமற்ற விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இருக்கும் பிரச்சினைகளை மறைக்கும் முயற்சியில் இருப்பது போன்றே தெரிகின்றது.
இதேவேளை இந்த அரசாங்கத்திற்கு பல்வேறு விடயங்கள் பூமராங் போன்று திரும்பி வந்து தாக்க ஆரம்பித்துள்ளது. துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் விமர்சித்தவர்களுக்கு இன்று அதனை ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு பல்வேறு வாகனங்கள் போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தியது. ஆனால் இந்த அரசாங்கம் இருக்கும் வரையில் விளையாட்டுக் காரை வாங்கலாமே தவிர வேறு வாகனத்தை வாங்குவது கனவு மட்டுமே என்று மக்கள் எண்ணும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் கனவிலும் வருமானம் தேடும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது. ஒலிவாங்கிகள் முன்னால் வாயில் அரசாங்கத்தை செய்தாலும் நடைமுறையில் அதனை செய்ய முடியாது என்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதே தெரிகின்றது என்றார்.
![]()