முச்சந்தி
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் கடும்போக்காளர் எதிர்ப்பு!… டிரம்ப் மத்தியஸ்த்தம் தொடருமா ?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய கடும்போக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போர் நிறுத்தப்பட்டால் அமெரிக்காவில் பதவியேற்கவுள்ள டிரம்ப் அரசின் மத்தியஸ்த்தின் முதல் வெற்றியாகும். ஆயினும் காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டொனால்ட் டிரம்பும் உரிமை கோரியுள்ளார்)கட்டார், எகிப்து, அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியுடன் சிக்கலான காசா போர் நிறுத்த உடன்படிக்கை கட்டார் தலைநகர் டோஹாவில் ஜனவரி 15 புதன்கிழமை எட்டப்பட்டது.
பாலஸ்தீன காசாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான உடன்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அமைச்சரவை வாக்கெடுப்பு:
ஆனால் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றது தொடர்பில் இஸ்ரேல் அமைச்சரவையில் வாக்கெடுப்பை நடத்த உள்ளமைக்கு ஹமாஸ் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பில் இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பார்னி கட்டாரில் இஸ்ரேல் அமைச்சரவையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்தார்.இந்த உடன்படிக்கையின் ஆரம்ப கட்டத்தில் ஆறு வார போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும். இதில் காசாவில் பேரழிவு மற்றும் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இஸ்ரேலியப் படை அங்கிருந்து படிப்படியாக வாபஸ் பெறப்படும்.
மேலும் ஹமாஸ் போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகள், இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்படுவார்கள்.
ஆயினும் இந்த உடன்படிக்கை மீதான இஸ்ரேலின் இணக்கம் அதன் பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் அரசின் ஒப்புதல் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படமாட்டாது. இதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை இடம்பெறவிருந்தது.
ஆனால் இறுதியில் ஹமாஸ் அமைப்பு கடைசி நிமிடத்தில் மேற்கொண்ட நிபந்தனைகள் உடன்படிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கையின் அனைத்து அம்சங்களுக்கும் ஹமாஸ் இணங்கியதாக மத்தியஸ்தர்கள் இஸ்ரேலை அறிவுறுத்தும் வரை இஸ்ரேலிய அமைச்சரவை கூடாது இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கைக்கான ஹமாஸின் இணக்கத்தை மத்தியஸ்தர்களுக்கு புதன்கிழமை அறிவித்ததாக அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் இஸ்ஸத் அல் ரஷீக் நேற்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
இஸ்ரேலிய கடும்போக்காளர்கள்:
இந்த உடன்படிக்கையை தடுப்பதற்கு நெதன்யாகு அரசில் உள்ள கடும்போக்காளர்கள்
தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பெரும்பான்மையான அமைச்சர்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கின்றன.
தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பெரும்பான்மையான அமைச்சர்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கின்றன.ஆயினும் ஹமாஸ் தோற்கடிக்கப்படுவதற்கு இஸ்ரேல் முழு அளவில் போரை நடத்தும் வரை தமது கட்சி அரசுடன் இருக்கும் என்று நிதி அமைச்சர் பெசாலல் ஸ்மொட்ரிச் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தால் அரசில் இருந்து விலகுவதாக தீவிர வலதுசாரியான பொலிஸ் அமைச்சரான இடாமர் பென் கிவிரும் எச்சரித்து வருகிறார்.
தற்போதைய இழுபறி காரணமாக உடன்படிக்கை சாத்தியப்படுமா அல்லது தொடர்ந்தும் போர் நடக்குமா என்பது குறித்து நெதன்யாகு அலுவலக அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
காசா மக்கள் ஆதரவு:
இந்த உடன்படிக்கை உடன் செயற்படுத்தப்பட வேண்டும் என்று பலஸ்தீனர்கள் மக்கள் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு மணி நேரத்திலும் காசா மக்கள் வீடுகளை இழந்து வருகின்றனர். ஞாயிறு வரை காத்திருக்காது போர் நிறுத்தத்தை அறிவித்து உடனடியாக செயற்படுத்த பாலஸ்தீன மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து காசா மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோதும் இஸ்ரேல் தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தியதாக
கூறப்படுகிறது.
காசாவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 81 பேர் கொல்லப்பட்டு மேலும் 188 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.டிரம்ப் உரிமை கோரல் :
கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, உடன்படிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை காசாவில் மோதலை நிறுத்தி, அதிகம் தேவைகயாக இருக்கும் பலஸ்தீன பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கடந்த பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகள் தமது குடும்பத்துடன் இணைவதற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வாஷிங்டனில் வைத்து தெரிவித்தார்.
இதேவேளை போர் நிறுத்த உடன்படிக்கையின் வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டொனால்ட் டிரம்பும் உரிமை கோரியுள்ளார்.
பாலஸ்தீன கைதிகள் விடுதலை:
2023 ஒக்டோபரில் பாலஸ்தீன போராளிகள் காசா மீது நடத்திய தாக்குதலில் 250 இஸ்ரேலியர்கள் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதில் 94 பணயக்கைதிகள் வரை தொடர்ந்து காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
இவர்களில் 34 பேர் மரணித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் கட்ட போர் நிறுத்தத்தில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் என 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதற்கு ஈடாக இஸ்ரேல் மீதான தாக்குதலால் ஆயுள் தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கும்
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டிய நிலைக்கு இஸ்ரேல் தற்போது தள்ளப்பட்டுள்ளது. எனினும் இஸ்ரேலில் இந்த உடன்படிக்கைக்கு பரவலான ஆதரவு வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டிய நிலைக்கு இஸ்ரேல் தற்போது தள்ளப்பட்டுள்ளது. எனினும் இஸ்ரேலில் இந்த உடன்படிக்கைக்கு பரவலான ஆதரவு வெளியாகியுள்ளது.போர் நிறுத்தம் அமுலாகினால் காசாவில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படை கிழக்கு நோக்கி பின்வாங்கும். அங்கு இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படவிருப்பதோடு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உதவி வாகனங்கள் காசாவுக்கு செல்ல அனுமதிக்கப்படவுள்ளன.
இதன் பின்னர் இரண்டாம் கட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை முழுமையாக வாபஸ் பெறுவதில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இறுதியான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் காசாவை மீள கட்டியழுப்புவது மற்றும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளின் உடல்களை திரும்ப அளிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

![]()