பாரிய மோசடிகள் ,ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தில்; நீதிமன்றங்களில் விரைவில் நிறுத்தப்படவுள்ள ராஜபக்சக்கள்
கடந்த அரசாங்கத்தின் போது அதிகாரமிக்க அமைச்சு ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் எதிர்காலத்தில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பாக முன்னாள் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரை கைது செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அமைச்சில் இடம்பெற்று வரும் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று அவற்றை உரிய நிறுவனங்களுக்கு விசாரணைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக இது தொடர்பான விசாரணைகளை புலனாய்வாளர்கள் மேற்கொண்டு பல ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பான ஊழல் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரை கைது செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தற்போது முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தொடர்பான பல விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அதில் ஒரு படியாக அவரது சகோதரர் திசர நாணயக்கார வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி தனி நபர்களிடம் 30 லட்சம் மோசடி செய்த சம்பவம்
தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2 வருடங்களில் அவரது வங்கிக் கணக்கில் 27 கோடி ரூபா பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
எனினும் தற்போது மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருட இறுதியில் விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் மனுச நாணயக்கார முதலில் பிரான்ஸ் சென்று பின்னர் தனது குடும்பத்தை பிரான்சுக்கு அழைத்து வந்ததாக வேறு சிலர் கூறுகின்றனர்.
இதன்படி ரணில் காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முக்கிய குற்றவாளியாக இருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றது போன்று ரணிலின் அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்காரவும் பிரான்சுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தவிர, எதிர்காலத்தில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தில் வெளிவரவுள்ளதாகவும், மேலும் பல பலமானவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இடம்பெற்ற மிக் ஒப்பந்தம் மற்றும் சிரந்தி ராஜபக்சவின் பெயரில் உள்ள சிறிலிய கணக்கு தொடர்பான விசாரணை, கதிர்காம காணி தொடர்பான யோசித ராஜபக்சவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆகியவை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()