தேசிய கீதத்தையும் ,தேசியக் கொடியையும் விரும்பவில்லை
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் சமாதானம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார். அது உண்மை தான் , ஆனால் அது உங்கள் பக்கத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி. யான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அரசின் கணக்கு வாக்குப்பதிவு மீதான மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
எனக்கு வயது 56, சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள்.அதனாலோ என்னவோ எமது நாட்டின் தேசிய கீதத்தையும் தேசியக் கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை, ஆனால் மதிப்பளிக்கின்றோம்.
இந்த மனநிலை எனக்கு மட்டுமல்ல எனது வயதையொட்டிய இன்னும் பல ஆயிரக்கணக்கனவர்களிற்குள்ளது, ஆனால் அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
நான் விரும்பும் தேசியகீதத்தையும் நான் விரும்பும் தேசியக்கொடியையும் எனது வாழ்க்கைக்காலத்திற்குள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசினுடையது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் சமாதானம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார். உண்மை, ஆனால் அதை எங்கிருந்து தொடங்கலாம் என்று சிந்தித்தால் அது உங்கள் பக்கத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் .
யுத்தத்தால் இறந்த உறவுகளை வணங்கும் நினைவேந்தலுக்கு நீங்கள் தடை போடவில்லை, அது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது. அதேநேரம் பலநூற்றுக்கணக்கான இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இன்றும் இராணுவமுகாம்கள் உள்ளன , இவ்விடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுத்து நல்லெண்ணத்தை காட்டுங்கள். அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யுங்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு மனச்சாட்சியுடன் விடையை தேடுங்கள், அதனூடாக உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள்,மகாவலி – எல் வலயத்தில் மூவினமக்களிற்கும் காணிகளை பகிர்ந்தளியுங்கள் .
ஜனாதிபதி தேர்தலில் 27 ஆயிரம் வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி அதே இடத்தில் பாராளுமன்ற தேர்தலில் 80,000 வாக்குகளை பெற்றது. இரண்டு மாதகாலத்தில் எப்படி இது நடந்தது?
முற்போக்கான பொதுவுடைமை தத்துவத்தை அடிப்படையாக கொண்ட இளம் ஜனாதிபதி நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளார் என்ற காரணத்தினால்தான். ஜனாதிபதி தலைமையில் வரும் அரசாங்கம் நாட்டில் காணப்படும் இருமுக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் என்ற நம்பிக்கையில்தான்.
முதலாவதாக இந்தநாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். இரண்டாவதாக பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.
முதலாவது பிரச்சனைக்கு தீர்வுகாணாமல் இரண்டாவதற்கு முழுமையான தீர்வொன்றை காணமுடியாது.
ஜனாதிபதி அவர்கள் தனது உரையில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை என எமது உறுப்பினர்கள் சொன்னாலும் இரு தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லெண்ணத்தை வெளிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் புதிய அரசியல் யாப்பின் வரைபு தயாரிக்கப்பட்டபோது வழிநடத்தல் குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி தனது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்த முயற்சி தொடரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து முன்செல்ல நாங்கள் தயாராகவே உள்ளோம்.
யுத்தம் முடிவிற்கு வந்து 15 வருடங்களாகிவிட்டன
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .15,000 மேற்பட்ட முன்னாள் போராளிகள்,75,000 விசேட தேவைகள் உள்ள மக்கள்
பெண் தலைமைத்துவகுடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள்
அ-து சமூகத்தில் 1/3 பகுதியினர் ஏனையவர்களின் உதவியின்றி சுயமாக எழுந்துநிற்கமுடியாதவர்கள்.
எனவே வடக்கு- கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார மீட்சித்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டிய பொறுப்பு இந்த அரசிற்குள்ளது, அதற்கான முயற்சியில் உங்களுக்கு கை கொடுக்க நாங்கள் உள்ளோம். தொடர்ந்தும் நிவாரணத்தை நம்பி வாழும் மற்றவர்களில் தங்கிவாழும் சமூகத்தை உருவாக்கதீர்கள்
அரசாங்கத்தாலும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத்திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள் என்றார்.
![]()