இதெல்லாம் மீண்டும் செய்ய மாட்டேன்; மன்னிப்பு கோரினார் தென் கொரியா அதிபர்!

தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் கூறியுள்ளார்.

கிழக்காசிய நாடான தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. இதை அடுத்து ‘தேச விரோத சக்திகளை ஒழிக்க, அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது என அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தென்கொரியா பார்லிமென்டில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் ராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ராணுவ ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இதனால் அந்த நாட்டில் 12 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களிடையே பேசியதாவது:

மக்களை கவலை அடைய செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். ராணுவ ஆட்சி அமல்படுத்தியதிற்கு என்னை மன்னித்து விடுங்கள். ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன். எனது அரசியல் எதிர்காலத்தை கட்சி தீர்மானிக்கும். எனது செயலுக்காக, எந்தவொரு விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *