தமிழ் இளைஞருக்கு அதிரடிப்படை பாதுகாப்பு!…. பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த பருத்தித்துறை நீதிமன்றம்!!
பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என தெரிவிக்கப்படும் தமிழ் இளைஞர் ஒருவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பருத்தித்துறை பொலிஸாரால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப் பொருளுடன் வடமராட்சியை சேர்ந்த மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சந்தேக நபர், தான் பாதாள உலகக் குழுவின் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா எனவும், அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து பூக்குடி கண்ணா என்பவருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாகவும், கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்ததாகவும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேற்குறித்த சம்பவங்களின் பின்னணியில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சந்தேக நபர் தெரிவித்ததை அடுத்து விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை நண் பகல் 12 மணியளவில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதையடுத்து பருத்தித்துறை நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன . நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றவர்கள் சகலரும் உடல் பரிசோதனை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே உள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு குறித்த சந்தேக நபர் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.