முச்சந்தி

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியும் தொழில்சார் பன்முக வளர்ச்சியும்… – ஐங்கரன் விக்கினேஸ்வரா

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு 21,083 கோடியை ($2.6 பில்லியன்) எட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் இந்திய ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்தன.

ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் பினாகா பல்ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் போன்ற ஆயுத அமைப்புகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக ஆர்மீனியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகளில், ஆர்மீனியா பல்வேறு ராணுவ தயாரிப்புகளுக்காக இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
ஏவுகணைகள், பீரங்கித் துப்பாக்கிகள், ராக்கெட் அமைப்புகள், ஆயுதங்களைக் கண்டறியும் ரேடார்கள், புல்லட்-ப்ரூஃப் உடைகள் மற்றும் இரவு நேரப் பார்வைக் கருவிகள் ஆகியவை இதில் அடங்கும்.

அமெரிக்காவுக்கு பல பாகங்கள் ஏற்றுமதி

போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் போன்ற முக்கிய நிறுவனங்களுடன், விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான பிற பாகங்களை, இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து அமெரிக்கா முக்கியமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

மறுபுறம், பிரான்ஸ் பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவிலிருந்து அதிக அளவு மென்பொருள் மற்றும் மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி இப்போது உலகளவில் 100 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், டோர்னியர்-228 விமானங்கள், பீரங்கி துப்பாக்கிகள், ராடார்கள், ஆகாஷ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்டுகள் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவை அடங்கும்.

இதற்கிடையே, ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் மேம்பட்ட வகைகளை இந்தியாவுடன் இணைந்து தயாரிப்பதில் பிரேசில் ஆர்வம் காட்டி வருகிறது.

ஆத்மநிர்பர் பாரத் திட்டம்:

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக இந்தியா 2019 முதல் 2024 வரை உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருந்தாலும், தனது ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறை தளத்தை விரிவுபடுத்துகிறது.

நாட்டின் பாதுகாப்பு-தொழில்துறை தளத்தில் இப்போது 430 உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் 16,000 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன.

இதற்கிடையே, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி 2023-24ல் சாதனை அளவாக 1.2 லட்சம் கோடியை எட்டியது. 50,000 கோடி ஆயுத ஏற்றுமதி மூலம் 2028-29க்குள் இதை 3 லட்சம் கோடியாக உயர்த்த முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

இந்தியாவின் ஆத்மநிர்பர் பாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுத அமைப்புகளின் இறக்குமதியை தடை செய்வதும், அதே சமயம் உலகளவில் ஆயுத ஏற்றுமதியை தீவிரமாக சந்தைப்படுத்துவதும் அடங்கும்.

சி – 295 போர் விமானம் தயாரிப்பு:

குஜராத் டாடா ஆலையில் சி-295 போர் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பலம் சேர்க்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் சர்வதேச வான்வெளி போக்குவரத்து சந்தையில் இந்தியாவுக்கும் நிரந்தர இடம் கிடைக்கும்.

ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட என பல்வேறு பயன்பாடுகளை கொண்ட சி-295 விமானங்கள் முழுவதும் உள்நாட்டில் தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலை நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்டை( டிஏஎஸ்எல்) குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் மோடியும், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து, திறந்து வைத்தனர்.

ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை உள்நாட்டில் துவங்க உள்ளது.

‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில் சி295 போர் விமானங்கள் தயாரிப்பதால் இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் பலவாகும்.

இந்திய பாதுகாப்பு அதிகரிப்பு

ஏர்பஸ் நிறுவனம் வடிவமைத்து தயாரிக்கும் இந்த விமானத்தால், படையினரை அழைத்து செல்லுதல், சரக்குகளை கையாளுதல், எரிபொருள் நிரப்புதல் பணிகள் எளிதாகும். கடலோர பாதுகாப்புக்கும் இவற்றை பயன்படுத்த முடியும்.

இந்த விமானமானது, தற்போது பயன்பாட்டில் உள்ள ரஷ்யாவின் அன்டோனோவ் ஏஎன்-32 மற்றும் எச்ஏஎல் நிறுவனத்தின் ஏவிரோ 748 விமானங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும். இந்த விமானங்களை விட சி 295 விமானம் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டது.

இந்த விமானத்தை குறுகிய மற்றும் செப்பனிடப்படாத ஓடுதளங்களில் பயன்படுத்த முடியும். சீன எல்லையை ஒட்டிய பகுதிகள் மற்றும் சவாலான பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு இவை உகந்ததாக இருக்கும்.

மணிக்கு 482 கி.மீ., வேகத்தில் 8 டன் எடை அல்லது 71 வீரர்கள் அல்லது 48 பாராட்ரூப்பர்களுடன் இந்த விமானம் பறக்கும் திறன் கொண்டது.

மேக் இன் இந்தியா திட்டம்:

பாதுகாப்பு துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தன்னிறைவு பாரதம்’ திட்டத்தின் முக்கியமானதாக சி-295 தயாரிப்பு மாறி உள்ளது.

சி-295 திட்டத்தின்படி இந்தியாவில் 56 விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், முதல் 16 விமானங்கள் ஏர் பஸ் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து பறக்கும் நிலையில் வழங்கும். எஞ்சிய 40 போர் விமானங்கள் வதோதராவில் உள்ள டாடா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும்.

C-295 ராணுவ விமான சிறப்பம்சம்:

இன்றைய நிலவரப்படி இந்தியாவிடம் 5 போர் விமானங்கள் வழங்கப்பட்டு உள்ளன. முதல் விமானம் 2023 செப்., மாதம் இந்தியாவிடம் வழங்கப்பட்டது.

தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் விமானங்களில் முதல்விமானம் 2026 செப்டம்பருக்குள் தயாராகும். எஞ்சியவை 2031 ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும்.

உள்நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்படுவதால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும். நேரடியாக 3 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைக்கும்.

போர் விமானங்களுக்கு தேவைப்படும் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களும் வளர்ச்சி பெறும். இந்த விமானத்தின் உற்பத்தி மூலம் கிடைக்கும் வணிக மற்றும் நிதி ரீதியிலான பலன்கள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க விளைவை தூண்டும்.

இந்தியாவின் வான்வெளி கட்டமைப்பு பலம் :

சி-295 போர் விமானம் திட்டத்தின்படி, பயிற்சி மையம் அமைத்தல் மற்றும் பராமரிப்பு மையம் அமைப்பதும் அடங்கும். இந்த விமானத்தை இந்திய விமானப்படை வீரர்கள் இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

பராமரிப்பு மையம் அமைப்பதுடன், உதிரி பாகங்களுக்கு தேவையான கருவிகளையும் ஏர் பஸ் நிறுவனம் அடங்கும். உ.பி., மாநிலம் ஆக்ராவில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

சி295 திட்டமானது, இந்தியாவின் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வது மட்டும் அல்லாது, எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

56 போர் விமானங்கள் தயாரித்து முடித்ததும், இந்தியாவிலேயே போர் விமானங்களை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு ஏர்பஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்யலாம்.

இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் சர்வதேச வான்போக்குவரத்து சந்தையில் இந்தியாவுக்கு என ஒரு முக்கியமான இடத்தை உறுதி செய்யும் என பாதுகாப்பு படை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.